என் மலர்
இந்தியா
மாநில அரசின் அதிகாரங்களில் தேவையில்லாமல் குறுக்கிடுகிறார் ஆளுநர் - தமிழ்நாடு அரசு வாதம்
- ஆளுநர் மசோதாக்கள் மீது அறிவுரை கூறும் ஆலோசகர் மட்டும்தானே தவிர முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படவில்லை.
- தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமனம் செய்ய முடியாத நிலை உள்ளது.
புதுடெல்லி:
கவர்னர் ஆர்.என்.ரவிக்கும், தமிழக அரசுக்கும் இடையே மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. குறிப்பாக சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கவர்னர் கிடப்பில் போட்டு வருவதாக ஆளுங்கட்சியினர் புகார் தெரிவித்து வருகிறார்கள்.
எனவே குறிப்பிட்ட கால வரம்புக்குள் துணைவேந்தர் நியமனம் உள்ளிட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க கவர்னருக்கு உத்தரவிடவேண்டும் என்று தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்து இருந்தது. இந்த மனுவை நீதிபதிகள் பார்திவாலா, மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று முன்தினம் விசாரித்தது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
உச்ச நீதிமன்றம்: ஒரு மசோதாவை ஆளுநர் சட்டமன்றத்திற்கே திருப்பி அனுப்பி வைக்கிறார் அதை ஏன் அனுப்பி வைக்கிறேன் என்பதை ஆளுநர் குறிப்பிட வேண்டியது மிகவும் அவசியமா? ஏனென்றால் அப்படி குறிப்பிடவில்லை என்றால் மாநில அரசால் எப்படி அதை சரி செய்ய முடியும் இதைப்பற்றி சட்டம் என்ன சொல்கிறது.
தமிழ்நாடு அரசு: பெரும்பாலான நேரங்களில் ஆளுநர் அப்படி சொல்வதில்லை வெறுமனே அதை நிலுவையில் போட்டு வைப்பார் அல்லது காரணம் எதையும் குறிப்பிடாமலேயே நிராகரித்து விடுவார்.
மசோதாக்கள் மீது முடிவெடுப்பதை அறிவுறுத்தும் அரசியல் சாசனப் பிரிவின் முதல் உட்பிரிவை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பதை தான் ஆளுநர் தரப்பில் கூறுகிறார்கள்.
ஆனால் அந்த உட்பிரிவின்படி மசோதாவை நிராகரித்தாலோ திருப்பி அனுப்பினாலோ அதற்கான காரணத்தை தெளிவாக சுட்டிக்காட்ட வேண்டும் என்று கூறுகிறது ஆனால் அதை கட்டாயமாக பின்பற்ற வேண்டியது இல்லை என ஆளுநர் தரப்பு கூறுகிறது.
ஆளுநர் மசோதாக்கள் மீது அறிவுரை கூறும் ஆலோசகர் மட்டும்தானே தவிர முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படவில்லை.
Concurrent பட்டியலில் இருக்கக்கூடிய வரம்புகள் அல்லது மாநில அரசின் வரம்புக்குட்பட்ட விஷயங்களில் மசோதாவை நிறைவேற்றினால் அதை எப்படி ஒரு ஆளுநரால் நிறுத்தி வைக்க முடிகிறது என தமிழ்நாடு அரசு கேள்வி எழுப்பியது.
அரசு அமைக்கும் தேடல் குழுவை ஆளுநர் ஏற்க மறுக்கிறார். தனக்கு தானே நியமனம் செய்யும் அதிகாரம் உள்ளது என செயல்படுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமனம் செய்ய முடியாத நிலை உள்ளது.
மாநில அரசின் அதிகாரங்களில் ஆளுநர் தேவையில்லாமல் குறுக்கிடுகிறார் என தமிழ்நாடு அரசு தரப்பு குற்றம் சாட்டியது.
ஆளுநருக்கு அனைத்து அதிகாரங்களையும் வழங்கினால், அது கூட்டாட்சியின் முடிவு ஆகும் என்று தமிழ்நாடு அரசின் சார்பில் வாதிடப்பட்டது.