என் மலர்
இந்தியா

இறுதிக் கட்டத்தில் பட்ஜெட் அறிக்கை: அல்வா வழங்கிய நிர்மலா சீதாராமன்

- ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தயாரிப்பு பணிகள் இறுதியானதும் அல்வா கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.
- இந்த நிகழ்ச்சியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இணை அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
2024- 2025 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் ஜூலை 23-ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், அல்வா தயாரிக்கும் நிகழ்ச்சி இன்று (ஜூலை 16) நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தயாரிப்பு பணிகள் இறுதியானதும் அல்வா கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். நிதிநிலை அறிக்கை தயாரிக்கும் அதிகாரிகளும் ஊழியா்களும் அறைக்குள் பூட்டப்படும் 'லாக்-இன்' நடைமுறை தொடங்குவதற்கு முன் அல்வா நிகழ்வு நடத்தப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இணை அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
வழக்கமான முறையில் பூஜை சடங்குகளையொட்டி தயாரிக்கப்பட்ட அல்வாவை அதிகாரிகளுக்கும் ஊழியா்களுக்கும் நிதியமைச்சா் வழங்கினாா்.
முன்னதாக நாடாளுமன்ற நிதியமைச்சகத்தில் உள்ள நார்த் பிளாக்கில் அல்வா கிண்டும் நிகழ்ச்சியை நிர்மலா சீதாராமன் தொடக்கி வைத்தார்.
பட்ஜெட் தயாரிப்புப் பணிகள் முடிவடைந்து அச்சிடும் பணி துவங்கியிருப்பதை அல்வா வழங்கும் விழா குறிப்பதாக கூறப்படுகிறது.
நிதி நிலை அறிக்கையும் ஆவணங்களும் தற்போது அச்சடிக்கப்படுவதில்லை என்றாலும் டிஜிட்டல் வடிவிலான பணிகளுக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட நிதித்துறை அதிகாரிகளும் ஊழியா்களும் தங்கள் வீடுகளுக்கு செல்லாமல் வெளித் தொடா்பு இல்லாமல் இந்தத் தயாரிப்பு பணிகளில் ஈடுபடுவாா்கள். இந்த விழாவில், பட்ஜெட் தயாரிக்க உதவிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு நிர்மலா சீதாராமன் நன்றி தெரிவித்தார்.