என் மலர்
இந்தியா

மணிப்பூரில் அனைத்து சாலைகளிலும் மக்கள் சுதந்திரமாக நடமாடுவதை உறுதி செய்யுங்கள்: அதிகாரிகளுக்கு அமித் ஷா உத்தரவு

- மணிப்பூர் மாநில பாதுகாப்பு குறித்து அமித் ஷா உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
- வருகிற 8-ந்தேதி முதல் மக்கள் சுதந்திரமாக நடமாடுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என உத்தரவு.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக கலவரத்தின் பிடியில் சிக்கியுள்ளது. மெய்தி மற்றும் குகி இன மக்களுக்கு இடையேயான இந்த இனக்கலவரத்தில் இதுவரை 250-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
கலவரத்தை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறபோதும் அங்கு இன்னும் வன்முறை முழுமையாக ஓய்ந்தபாடில்லை.
இதற்கிடையே கலவரத்தை தூண்டும் வகையில் மணிப்பூர் முதல்வர் பைரன் சிங் பேசியதாக ஆடியோ வெளியானது. இந்த விவகாரத்தில் பைரன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்ததால் மணிப்பூரில் கடந்த மாதம் 13-ந் தேதி ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
இந்தநிலையில் இன்று மணிப்பூர் மாநில பாதுகாப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது, மார்ச் 8-ந்தேதியில் இருந்து மணிப்பூர் மக்கள் சாலைகளில் சுதந்திரமாக நடமாடுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். சாலைகளில் தடங்கள் ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.