என் மலர்
இந்தியா
ஒன்றுமே செய்யாமல் ஓட்டு கேட்க எவ்வளவு தைரியம்?.. தாமரை மலரும் என்று சொன்ன மோடிக்கு கெஜ்ரிவால் கேள்வி
- இந்த 'ஆப்-டா' ஆட்கள் வரவிருக்கும் டெல்லி தேர்தலில் தங்கள் தோல்வியைக் கண்டு பீதியடைந்துள்ளனர்.
- டெல்லி நகருக்கு எதுவும் செய்யாத நிலையில், டெல்லி மக்களிடம் வாக்கு கேட்க பாஜகவுக்கு எவ்வளவு தைரியம்?
டெல்லியில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
இன்று டெல்லி ரோகினி பகுதியில் உள்ள ஜப்பான் பூங்காவில் நடைபெற்ற பாஜக பரிவர்தன் பேரணியில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, டெல்லியிலும் தாமரை மலரும் என்று நம்புகிறேன்.
டெல்லி, சிறந்த தலைநகர் என்ற அந்தஸ்தை பாஜகவால் மட்டுமே வழங்க முடியும். டெல்லி மக்களின் இதயங்களை வெல்வதற்கும், டெல்லியில் இருந்து இந்த 'AAP-da' [ஆம் ஆத்மி] ஐ அகற்றுவதற்கும் இதுவே சிறந்த நேரம்.
வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதில் தங்களின் அர்ப்பணிப்பால் மக்கள் பாஜகவை நம்பத் தொடங்கியுள்ளனர் என்றும் இந்த 'ஆப்-டா' அரசுக்கு டெல்லி மக்களின் வளர்ச்சிக்கான தொலைநோக்கு பார்வை இல்லை. இன்றும் அனைத்து வளர்ச்சிப் பணிகளும் டெல்லியில் மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
டெல்லியின் மூலை முடுக்கெல்லாம் நமோ பாரத் ரயில் சேவை, நெடுஞ்சாலைகள், மேம்பாலங்கள் போன்ற பணிகளை மத்திய அரசு செய்துள்ளது. இந்த 'ஆப்-டா' ஆட்கள் வரவிருக்கும் டெல்லி தேர்தலில் தங்கள் தோல்வியைக் கண்டு பீதியடைந்துள்ளனர். அவர்கள் பொய்களைப் பரப்புகிறார்கள் என்று தெரிவித்தார்.
இதனையடுத்து செய்தியாளர் கூட்டத்தில், பேசிய ஆம் ஆத்மியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், 2020 ஆம் ஆண்டு டெல்லி தேர்தல் அறிக்கையில் பாஜக அளித்த வாக்குறுதிகளை குறிப்பிட்டு டெல்லி நகருக்கு எதுவும் செய்யாத நிலையில், டெல்லி மக்களிடம் வாக்கு கேட்க பாஜகவுக்கு எவ்வளவு தைரியம்? என்று கேள்வி எழுப்பினார்.
டெல்லி நில சீர்திருத்த சட்டத்தின் 81 மற்றும் 33 பிரிவுகள் நீக்கப்படும் என்று பிரதமர் மோடி உறுதியளித்தார். இது மத்திய அரசால் மட்டுமே செய்ய முடியும். காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி அரசுகள் இரண்டும் மத்திய அரசுக்கு பரிந்துரைகளை அனுப்பின, ஆனால் அவை புறக்கணிக்கப்பட்டன என்று கெஜ்ரிவால் தெரிவித்தார்.
பலமுறை உத்தரவாதம் அளித்தும், விவசாயிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்களுக்கு உரிமையை வழங்க பாஜக தவறிவிட்டது என்று கெஜ்ரிவால் கூறினார். பிரதமர் மோடி அடுத்ததாக டெல்லியில் வாக்கு கேட்கும் போது இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன். டெல்லி கிராமப்புற மக்கள் காத்திருக்கிறார்கள் என்று அவர் கூறினார்.