என் மலர்
இந்தியா

இந்த ஆண்டு கோடை காலத்தில் வெயில் தாக்கம் அதிகமாக இருக்கும்- இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

- இந்த வார தொடக்கத்தில் கேரள மாநிலம் கண்ணூரில் அதிகபட்ச வெப்ப நிலை 40 டிகிரியாக இருந்தது.
- மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 38 டிகிரி வெயில் அடித்தது.
புதுடெல்லி:
கோடை காலம் தொடங்கி விட்டதால் வெயில் வறுத்தெடுக்க தொடங்கி உள்ளது. இதனால் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த பிப்ரவரி மாதம் இயல்பை விட வெயில் அதிகமாக இருந்ததாக அகில இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
1901-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இதே போன்று வெயில் கொளுத்தியது. 124 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு தான் பிப்ரவரியில் வெப்பநிலை அதிகமாக இருந்தது தெரியவந்துள்ளது. இந்த மாதத்தில் சராசரியாக 22.04 டிகிரி வெயில் பதிவானது. இது இயல்பை விட 1.34 டிகிரி வெயில் அதிகமாகும். கொங்கன் மற்றும் கர்நாடக கடலோர பகுதி மற்றும் கேரளாவில் சில பகுதிகளில் அதிக வெப்பம் பதிவானது.
இங்கு இயல்பை விட 4-ல் இருந்து 8 டிகிரி வரை அதிக வெயில் இருந்தது. இந்த வார தொடக்கத்தில் கேரள மாநிலம் கண்ணூரில் அதிகபட்ச வெப்ப நிலை 40 டிகிரியாக இருந்தது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 38 டிகிரி வெயில் அடித்தது.
இந்த ஆண்டை பொறுத்தவரை கடந்த ஆண்டை விட கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை வடகிழக்கு மாநிலங்கள், வட மாநிலங்கள், தென் மேற்கு இந்திய பகுதிகளில் கடந்த ஆண்டுகளை விட வெப்ப அலை அதிகமாக வீசும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
உத்தரபிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, உத்தரகாண்ட், கோவா உள்ளிட்ட கடலோர பகுதிகளில் இயல்பை விட அதிக வெயில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மார்ச் மாத இறுதியில் பஞ்சாப், அரியானா மாநிலங்களில் கோதுமை உள்ளிட்ட பயிர்கள் அறுவடை நடைபெறும். இந்த ஆண்டு வெயில் அதிகரிக்கும் என்பதால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்படும் என அஞ்சப்படுகிறது.
ஏற்கனவே கோதுமை உற்பத்தி கடந்த 3 ஆண்டுகளாக குறைந்து வருவதால் அதன் விலை மேலும் அதிகரிப்பதற்கான சூழ்நிலை உருவாகி உள்ளது.