என் மலர்
இந்தியா
அரசு தேர்வில் ஒருவர் மட்டும் 100-க்கு 101.66 மதிப்பெண்- முறைகேடு நடந்திருப்பதாக கூறி ஏராளமானோர் போராட்டம்
- அதிகாரிகளின் விளக்கத்தை போராட்டக்குழு தலைவரான கோபால் பிரஜாபத் ஏற்க மறுத்தார்.
- விசாரணை நடத்தக்கோரி முதல்-மந்திரி மோகன் பகவத்துக்கு மனு கொடுத்துள்ளோம்.
இந்தூர்:
மத்தியபிரதேச மாநிலத்தில் வனக்காவலர், களக்காவலர் மற்றும் சிறைக்காவலர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு தேர்வு மாநில அரசுப்பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்டது. இந்த தேர்வை ஏராளமானோர் எழுதினர்.
கடந்த 13-ந் தேதி தேர்வு முடிவுகள் வெளியானது. அதில் தேர்வு எழுதிய ஒருவருக்கு 100-க்கு 101.66 மதிப்பெண்கள் வழங்கப்பட்டு இருந்தது. அவர் தரவரிசை பட்டியலில் முதலிடமும் பெற்று இருந்தார்.
இதனால் தேர்வு எழுதியவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தேர்வில் முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டி அந்த தேர்வு எழுதிய பலர் கோபால் பிரஜாபத் என்பவரது தலைமையில் இந்தூர் கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர். இதுபற்றி அதிகாரிகள் கூறுகையில், தேர்வு முடிவு அறிவிப்புக்கு பிறகு, தேர்வுக்குழு விதிகளின்படி ஆட்சேர்ப்புத் தேர்வில் 'சாதாரணமயமாக்கல் செயல்முறை' ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதன் காரணமாக சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்கள் முழு மதிப்பெண்களுக்கு (100) அதிகமாகவும், பூஜ்ஜியத்திற்கும் குறைவாகவும் பெறலாம் என்று கூறினர்.
அதிகாரிகளின் இந்த விளக்கத்தை போராட்டக்குழு தலைவரான கோபால் பிரஜாபத் ஏற்கமறுத்தார். இதுபற்றி அவர் கூறுகையில், ஆள்சேர்ப்பு தேர்வில் பின்பற்றப்பட்ட சாதாரணமயமாக்கல் செயல்முறையின் காரணமாக ஒருவர் மொத்த மதிப்பெண்களை விட அதிகமாக எடுத்தது மாநில வரலாற்றில் இதுவே முதல் முறை. நியாயமற்ற செயல்முறைக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். இதுபற்றி விசாரணை நடத்தக்கோரி முதல்-மந்திரி மோகன் பகவத்துக்கு மனு கொடுத்துள்ளோம். இதன் மீது நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் எங்கள் போராட்டம் தொடரும் என்றார்.