என் மலர்
இந்தியா
இந்தியா கூட்டணிக்கு தலைமை தாங்க தயார்.. ஆனால்.. மம்தா பானர்ஜி பளிச்!
- நான் இந்தியா கூட்டணியை உருவாக்கினேன், ஆனால் அவர்களால் அதை ஒன்றாக வைத்திருக்க முடியவில்லை.
- மேற்கு வங்கத்தில் தங்களால் பாஜகவை தோற்கடிக்க முடிந்தபோது மகாராஷ்டிராவில் ஏன் உங்களால் முடியவில்லை என்று மம்தா கேட்டார்
கடந்த மக்களவை தேர்தலில் பாஜகவின் என்டிஏ கூட்டணியை எதிர்க்க தேசிய கட்சியான காங்கிரசை முன்னிறுத்தி மாநில கட்சிகளை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டது இந்தியா கூட்டணி. திமுக, ஆம் ஆத்மி, திரிணமுல் காங்கிரஸ், ஜேஎம்எம் என மாநிலத்தில் ஆளும் கட்சிகள் பல இதில் அங்கம் வகிக்கின்றன.
தொடங்கப்பட்டதில் இருந்தே பல்வேறு கூட்டணி பிரச்சனைகளும் இருந்து வந்தது. கூட்டணியை ஒன்று சேர்ப்பதில் முக்கிய பங்கு வகித்த பீகார் முதல்வரும் ராஷ்டிரிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமார் கடைசி நேரத்தில் என்டிஏ கூட்டணிக்குத் தாவினார்.
மேலும் மேற்கு வங்க ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் முதல்வருமான மம்தா பானர்ஜி இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்தாலும் கூட்டணி விவகாரங்களில் பிடி கொடுக்காமல் தள்ளியே இருந்தார்.
ஆனாலும் மக்களவை தேர்தலில் கணிசமான அளவு வெற்றியைப் பதிவு செய்த இந்தியா கூட்டணி பாஜகவின் தனிப் பெரும்பாண்மை கனவை தகர்த்து கூட்டணி தயவில் ஆட்சி அமைக்கும் நிலையை ஏற்படுத்தியது. இருப்பினும் வெற்றி பெரும் அளவுக்கு இந்தியா கூட்டணி வலிமை பெறவில்லை.
இந்நிலையில் இந்தியா கூட்டணியை விட்டு தள்ளியே இருந்த மம்தா, தற்போது கூட்டணிக்குத் தலைமை தாங்க தயார் என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் தனியார் செய்தி ஊடகத்துக்குப் பேட்டி அளித்த மம்தா, நான் இந்தியா கூட்டணியை உருவாக்கினேன், ஆனால் அவர்களால் [எதிர்க்கட்சிகள்] அதை ஒன்றாக வைத்திருக்க முடியவில்லை. நான் என்ன செய்வது? நான் முன்னணிக்குத் தலைமை தாங்கவில்லை.
முன்னணியின் தலைவர்கள் அனைவரும் ஒன்றாக இருப்பதைப் பார்க்க வேண்டும். அவர்கள் என்னைக் கண்டுகொள்வதே இல்லை, ஆனால் நான் அனைத்து தேசிய மற்றும் பிராந்திய கட்சிகளுடனும் சிறந்த உறவைப் பேணுகிறேன் என்று தெரிவித்தார்.
வலுவான பாஜக-விரோத சக்தியாக அவருக்கு அங்கீகாரம் கிடைத்துள்ள நிலையில், நீங்கள் ஏன் இந்த கூட்டணிக்கு பொறுப்பேற்கவில்லை என்று செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த மம்தா, வாய்ப்பு கிடைத்தால் இந்தியா கூட்டணியின் சுமூகமான செயல்பாட்டை உறுதி செய்வேன். நான் மேற்கு வங்கத்திற்கு வெளியே செல்ல விரும்பவில்லை, ஆனால் நான் வங்காளத்தில் இருந்தே கூட்டணியை இயக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.கல்யாண் பானர்ஜி, காங்கிரஸ் மற்றும் பிற இந்தியா கூட்டணி கட்சிகள் தங்கள் ஈகோக்களை ஒதுக்கி வைத்துவிட்டு, மம்தா பானர்ஜியை எதிர்க்கட்சிக் கூட்டணியின் தலைவராக அங்கீகரிக்குமாறு தெரிவித்த நிலையில் தற்போது மம்தாவின் இந்த கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் மகாராஷ்டிர சட்டமான்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி கட்சிகள் தோல்வி அடைந்த நிலையில் மேற்கு வங்கத்தில் நடந்த இடைத்தேர்தலில் திரிணாமுல் பெரு வெற்றி பெற்றது. இதை சுட்டிக்காட்டி மேற்கு வங்கத்தில் தங்களால் பாஜகவை தோற்கடிக்க முடிந்தபோது மகாராஷ்டிராவில் ஏன் உங்களால் முடியவில்லை என்று மம்தா கேள்வி எழுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.