search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கைவிலங்குடன் நாடு கடத்திய அமெரிக்கா: ஜெய்சங்கர் விளக்கமும்... எதிர்க்கட்சி எம்.பி.க்கள் விமர்சனமும்...
    X

    கைவிலங்குடன் நாடு கடத்திய அமெரிக்கா: ஜெய்சங்கர் விளக்கமும்... எதிர்க்கட்சி எம்.பி.க்கள் விமர்சனமும்...

    • அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளிக்கும்போது, அமெரிக்காவுக்கு சரியான பதில் அளிப்பார் என நம்பினோம்
    • இந்தியர்கள் மனிதாபிமானமற்ற முறையில் திருப்பி அனுப்பப்பட்ட விதம் நாட்டையே அவமானப்படுத்தியுள்ளது

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவுப்படி, அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டினர் அதிகாரிகளால் நாடுகடத்தப்பட்டு வருகின்றனர்.

    இந்தியாவை சேர்ந்த 104 பேரை அமெரிக்கா அந்நாட்டு ராணுவ விமானம் மூலம் அனுப்பி வைத்தது. அவர்கள் நேற்று பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் வந்தடைந்தனர். இந்தியா வந்தடைந்தவர்களில் பெரும்பாலானோர் குஜராத், அரியானா, பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள்.

    ராணுவ விமானத்தில் வரும்போது கை மற்றும் காலில் விலங்கு மாட்டி அழைத்து வரப்பட்டனர். இது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. கண்ணியத்துடன் அமெரிக்கா நடத்தவில்லை. இது இந்தியாவுக்கு தலைக்குனிவு என விமர்சனம் எழுந்தது.

    இது தொடர்பாக பாராளுமன்ற மாநிலங்களவையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்தார். அப்போது "இந்தியர்களை நாடு கடத்தும் செயல்முறை புதிது அல்ல. பல ஆண்டுகளாக உள்ளது. அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியிருந்த இந்தியர்கள் 2012-ல் இருந்து திருப்பி அனுப்பப்படுகின்றனர். 2012-ல் 530 பேர், 2019-ல் 2 ஆயிரம் பேர் சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருந்த இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். கை விலங்கு போடுவது அமெரிக்காவின் வழக்கம். சட்டப்படியே அவர்களுக்கு கை, கால்களில் விலங்கு போடப்பட்டது. பெண்கள், குழந்தைகள் விலங்கிடப்படவில்லை. இந்தியர்களை சட்ட விரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கும் ஏஜெண்டுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். திருப்பி அனுப்பப்படும் இந்தியர்களை, மரியாதையுடன் நடத்த கோரிக்கை விடுத்துள்ளோம்" என விளக்கம் அளித்தார்.

    இந்த நிலையில் ஜெய்சங்கர் விளக்கம் குறித்து காங்கிரஸ் எம்.பி.க்கள். உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பதில் அளித்துள்ளனர்.

    காங்கிரஸ் எம்.பி. ஷக்தி சின் கோஹில்

    பாராளுமன்றத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளிக்கும்போது, அமெரிக்காவுக்கு சரியான பதில் அளிப்பார் என நம்பினோம். அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டவர்கள் பயங்கரவாதிகள் கிடையாது. அவர்கள் ஏன் விலங்கு போட்டு அழைத்து வரப்பட்டார்கள்.

    இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் பதில் அளிக்கவில்லை. வந்தவர்களில் 33 பேர் இந்தியாவின் மாடல் மாநிலம் எனக் கூறப்படும் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர்கள். மக்களை கண்ணியத்துடன் மீட்க நம்முடைய ராணுவ விமானம் ஏன் அனுப்பப்படவில்லை?.

    காங்கிரஸ் ரன்தீப் சுர்ஜிவாலா

    140 கோடி இந்தியர்களையும் மோடி அரசு இழிவு படுத்தியுள்ளது. 104 இந்தியர்கள் அமெரிக்காவிலிருந்து மனிதாபிமானமற்ற முறையில் திருப்பி அனுப்பப்பட்ட விதம் நாட்டையே அவமானப்படுத்தியுள்ளது. 7.25 லட்சம் இந்தியவர்களை அமெரிக்கா அவர்களில் நாட்டில் இருந்து நாடுகடத்த திட்டமிட்டுள்ளது அரசுக்கு தெரியுமா?. கைவிலங்கு மாட்டப்பட்ட நிலையில் இந்தியர்கள் ஏன் நாடு கடத்தப்பட்டனர்? போன்ற கேள்விகளை இந்திய அரசிடம் கேட்டோம்.

    ஆனால் அரசிடம் இருந்து பதில் இல்லை. அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் தடுப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ளதை பற்றியும், அவர்கள் எவ்வாறு நடத்தப்பட்டார்கள் என்பது பற்றியும், அவர்களுக்கு ஏன் தூதரக அணுகல் வழங்கவில்லை என்பது பற்றியும் கேள்வி எழுப்பினோம். கடந்த 75 ஆண்டுகளில் மிகவும் பலவினமான அரசு மோடி அரசுதான் என்பதுதான் உண்மை.

    திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி

    பொதுவாக நாங்கள் வெளியுறவு விவகாரம் குறித்து நாங்கள் பேசுவதில்லை. ஆனால் கைவிலங்கு போட்டு இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டது ஏற்றுக் கொள்ள முடியாதது.

    இது மனித உரிமை மீறலாகும். இந்திய கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் என நம்புகிறேன்.

    சிவசேனா (UBT) எம்.பி. பிரியங்கா சதுர்வேதி

    வாஷ்ரூம்-ஐ பயன்படுத்த முடியாத அளவிற்கு கை மற்றும் காலில் விலங்கு மாட்டி நாடு கடத்தப்பட்டுள்ளனர். அவர்கள் குற்றவாளி இல்லை என்பதை அமெரிக்காவுக்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன். மனிதாபிமானமற்ற வகையில் அனுப்பியுள்ளனர். இதை இந்தியாவால் ஏற்றுக்கொள்ள முடியாது.

    ஒரு பக்கம் டொனால்டு டிரம்ப் தனது நண்பர் என பிரதமர் மோடி சொல்கிறார். மறுபக்கம் நம் நாட்டினர் இவ்வாறு நடத்தப்படுகின்றனர். தேசத்தின் கண்ணியத்திற்கும், மரியாதைக்கும் எதிரானது. நாம் இதற்கு சரியான எதிர்ப்பு கூட தெரிவிக்கவில்லை.

    காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம்

    அமெரிக்கா, அதன் நாட்டிற்குள் சட்டவிரோதமாக குடியேறியவர்களை சட்டப்பூர்வமாக வெளியேற்றுகிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

    ஆனால் அமெரிக்கா கண்ணியத்துடன் செய்திருக்கலாம். குறிப்பாக நட்டுபுடன் இருக்கும் நாட்டு மக்களை கண்ணியத்துடன் நாடு கடத்தியிருக்கலாம். டிப்ளோமேட்டிக் மூலமாக இந்திய அரசு இதற்கான ஏற்பாடுகளை செய்திருக்கலாம்.

    Next Story
    ×