என் மலர்
இந்தியா

மாயமானவர்களை தேடுபவர்களை அவமதிப்பதாகும்: யோகி ஆதித்யநாத்தின் கழுகு கருத்துக்கு அகிலேஷ் யாதவ் பதில்

- கழுககள் கண்களுக்கு பிணங்கள் மட்டுமே தெரிந்தன. பன்றிகள் கண்களுக்கு அசுத்தம் தெரிந்தது. பக்தர்கள் கடவுளை கண்டனர்- யோகி ஆதித்யநாத்
- துக்கத்தில் இருக்கும் இந்த குடும்பங்களை முதலமைச்சர் கழுகுகள் என்று அழைக்கிறாரா?- அகிலேஷ் யாதவ்
மகா கும்பமேளாவை முன்னிட்டு உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் புனித நீராடி வருகின்றன. நாளையுடன் மகா கும்பமேளா விழா நிறைவடைகிறது. இதுவரை 50 கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடியுள்ளனர்.
கடந்த மாதம் மவுனி அமாவாசையை முன்னிட்டு அதிகாலையில் ஏராளமான பக்தர்கள் புனித நீராட குவிந்தனர். அப்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 30 பேர் உயிரிழந்ததாக உத்தர பிரதேச அரசு தெரிவித்தது. ஆனால் உயிரிழந்தவர்கள் அதிகம். உண்மையான எண்ணிக்கைகை மாநில அரசு வெளியிட மறுக்கிறது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியது. இது தொடர்பாக பாராளுமன்றத்திலும் குரல் எழுப்பின.
இதற்கிடையே உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் "கழுககள் கண்களுக்கு பிணங்கள் மட்டுமே தெரிந்தன. பன்றிகள் கண்களுக்கு அசுத்தம் தெரிந்தது. பக்தர்கள் கடவுளை கண்டனர்" எனக் கூறியிருந்தார்.
இந்த நிலையில் யோகி ஆதித்ய நாத் கழுகுகள் எனக் கூறியதற்கு அகிலேஷ் யாதவ் கண்டனம் தெரிவித்துள்ளனர். தங்களுடைய அன்பானவர்களை தேடிக்கொண்டிருக்கும் நபர்களை அவமதித்துள்ளார் என அகிலேஷ் யாதவ் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அகிலேஷ் யாதவ் கூறுகையில் "தற்போது கூட, ஏராளமான மக்கள் கும்பமேளா கூட்ட நெரிசலில் இழந்த தங்களுடைய சகோதரர்கள், குழந்தைகள், பெற்றோர்கள் என அன்பானவர்களை தேடிக் கொண்டு இருக்கிறார்கள். இன்னும் சில மாயமாகியுள்ளனர்.
துக்கத்தில் இருக்கும் இந்த குடும்பங்களை முதலமைச்சர் கழுகுகள் என்று அழைக்கிறாரா? அரசியலமைப்புச் சட்டப் பதவியில் இருக்கும் ஒருவரின் உணர்வின்மையின் உச்சக்கட்டம் இது.
மிகப்பெரிய அளவிலான துயர சம்பவம் நடைபெற்ற போது, முதலமைச்சர் நடத்திய ஆய்வு என்ன?. மகா கும்பமேளாவில் நடைபெற்ற உயிரிழப்புகள் மற்றும் குழப்பங்கள் யோகி ஆதித்யநாத் அரசின் தோல்விக்கு ஆதாரம்.
லக்னோ மற்றும் டெல்லியில் உள்ள பாஜக அரசாங்கங்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்கின்றன. இப்போது பிரயாக்ராஜில் கங்கை நீரின் தரம் குறித்து மத்திய மற்றும் மாநில நிறுவனங்கள் மோதிக் கொள்வதைக் காண்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.