என் மலர்
இந்தியா

மீண்டும் விண்வெளியில் செயற்கைக்கோள் ஒன்றிணைப்பு பரிசோதனை- இஸ்ரோ தகவல்

- ரஷியா, அமெரிக்கா, சீனாவை தொடர்ந்து விண்வெளி டாக்கிங் செய்த 4-வது நாடு என்கிற பெருமையை இந்தியா பெற்றது.
- விண்வெளி டாக்கிங் மூலம் ஒன்றிணைக்கப்பட்ட செயற்கைக்கோள் தற்போது நீள்வட்ட சுற்றுப்பாதையில் உள்ளது.
புதுடெல்லி:
விண்வெளியில் இந்தியாவின் விண்வெளி நிலையத்தை அமைக்கும் திட்டத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) செயல்படுத்த உள்ளது. அத்துடன் சந்திரயான்-4 உள்ளிட்ட திட்டங்களும் இஸ்ரோவின் பட்டியலில் இருக்கிறது.
மிகப்பெரிய இந்த திட்டங்களுக்காக விண்ணில் செயற்கைக்கோள்களை ஒன்றாக இணைக்கும் (ஸ்பேடெக்ஸ்) நவீன தொழில்நுட்ப ஆய்வு அதாவது 'விண்வெளி டாக்கிங் பரிசோதனை'க்காக இஸ்ரோ 'சேசர்' (ஸ்பேடெக்ஸ்-ஏ), 'டார்கெட்' (ஸ்பேடெக்ஸ்-பி) என்ற இரண்டு செயற்கைக்கோள்களை கடந்த டிசம்பர் 30-ந்தேதி விண்ணில் செலுத்தியது.
பின்னர் பல கட்ட முயற்சிகளுக்குப்பின் கடந்த ஜனவரி 16-ந்தேதி விண்ணில் வைத்தே இந்த 2 செயற்கைக்கோள்களையும் ஒன்றாக இணைத்தது. இதன் மூலம் ரஷியா, அமெரிக்கா, சீனாவை தொடர்ந்து விண்வெளி டாக்கிங் செய்த 4-வது நாடு என்கிற பெருமையை இந்தியா பெற்றது.
இந்த நிலையில் விண்வெளியில் ஒன்றாக இணைக்கப்பட்ட இந்த செயற்கைக்கோள்களை தனித்தனியாக பிரித்து ஒன்றிணைக்கும் பணிகளை செய்ய திட்டமிட்டு உள்ளது. இந்த பணி வருகிற 15-ந்தேதி தொடங்கும் என இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறியுள்ளார்.
டெல்லியில் நடந்த இந்திய அறிவியல் கொண்டாட்டத்தில் பங்கேற்று பேசும்போது இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
விண்வெளி டாக்கிங் மூலம் ஒன்றிணைக்கப்பட்ட செயற்கைக்கோள் தற்போது நீள்வட்ட சுற்றுப்பாதையில் உள்ளது. எனவே 2 மாதங்களுக்கு ஒருமுறை நமக்கு 10 முதல் 15 நாட்கள் இடைவெளி கிடைக்கும்.
எனவே மார்ச் 15-ந்தேதியில் இருந்து செயற்கைக்கோள் இணைப்புக்கான வாய்ப்பு நமக்கு கிடைக்கும் தற்போது செயற்கைக்கோள்களைப் பிரித்து மீண்டும் இணைப்பதற்கான உருவகப்படுத்துதல் (சிமுலேஷன்) பரிசோதனைகளை நாங்கள் செய்து வருகிறோம். பின்னர் 15-ந்தேதி முதல் ஸ்பேடெக்ஸ் பரிசோதனைகளை தொடங்குவோம்.
இந்த விவகாரத்தில் பல்வேறு பரிசோதனைகளை செய்ய விரும்புகிறோம். செயற்கைக்கோள்களில் அதிகமான உந்துவிசை இருக்கிறது. எனவே 2 மாதங்களுக்குப் பிறகு கிடைக்கும் மூன்றாவது பகுதிக்கான சோதனைகளையும் நாங்கள் வரிசையாகக் கொண்டுள்ளோம்,
சந்திரயான்-4 மற்றும் இந்திய விண்வெளி நிலையம் நிறுவுதல் போன்ற ஏராளமான எதிர்கால திட்டங்களுக்கு இந்த ஸ்பேடெக்ஸ் திட்டம் ஒரு முன்னணி பரிசோதனை ஆகும்.
இவ்வாறு இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறினார்.