search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மன்மோகன் சிங் இறப்பில் மலிவான அரசியல்: காங்கிரசை சாடிய ஜே.பி.நட்டா
    X

    மன்மோகன் சிங் இறப்பில் மலிவான அரசியல்: காங்கிரசை சாடிய ஜே.பி.நட்டா

    • முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இறுதிச்சடங்கிற்கு அரசு தனி இடம் ஒதுக்கவில்லை.
    • மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் அமைக்க மத்திய அரசு இடம் ஒதுக்கியுள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியாவின் முதல் சீக்கிய பிரதமரான மன்மோகன் சிங் இறுதிச்சடங்கிற்கு தனி இடம் ஒதுக்காமல் பா.ஜ.க. அரசு அவமதித்து விட்டது என காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது.

    இதுதொடர்பாக, பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அளித்த பதிலில் கூறியுள்ளதாவது:

    முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், தற்போதைய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயும் முன்னாள் பிரதமரின் இறப்பில் கூட அரசியல் விளையாட்டு விளையாடுவதை தவிர்க்கவில்லை என்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.

    மன்மோகன் சிங் உயிருடன் இருந்தபோதும், அவர் பிரதமர் பதவியை வகித்தபோதும் காங்கிரஸ் கட்சி ஒருநாளும் அவரை மதித்தது இல்லை. அவரை விட அதிக வலிமை நிறைந்தவராக சோனியா காந்தியை முன்னிறுத்தி அதன்மூலம் மன்மோகன் சிங் அவர்களை அவமதித்த கட்சி தான் காங்கிரஸ் கட்சி.

    அவசர சட்ட நகலை கிழித்தெறிந்து ராகுல் காந்தி மன்மோகன் சிங்கை அப்போதே அவமதித்து இருக்கிறார். ராகுல் காந்தி குடும்பம் காங்கிரஸைச் சேர்ந்தவராக இருந்தாலும், தேசத்தின் எந்தத் தலைவருக்கும் மரியாதையோ, நீதியோ வழங்கவில்லை.

    கொள்கையற்ற காங்கிரஸ் கட்சியின் வரலாற்றுப் பாவங்களை தேசம் ஒருபோதும் மறக்காது, மன்னிக்காது.

    மன்மோகன் சிங் உயிரோடு இருந்தபோது அவருக்கு உண்மையான மரியாதையை காங்கிரஸ் ஒருபோதும் வழங்காத நிலையில், இப்போது அவரது மரியாதையின் பெயரில் மலிவான அரசியல் செய்கிறார்கள்.

    மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் அமைக்க மத்திய அரசு இடம் ஒதுக்கியுள்ளது. இதுகுறித்து அவரது குடும்பத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், காங்கிரஸ் தொடர்ந்து பொய்களைப் பரப்பி வருகிறது.

    இத்தகைய மலிவான அரசியலில் ஈடுபடுவதை ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்பட பிற காங்கிரஸ் தலைவர்கள் தவிர்க்க வேண்டும் என தெரிவித்தார்.

    Next Story
    ×