என் மலர்
இந்தியா
கேரளாவில் சாலையோரம் தூங்கியவர்கள் மீது லாரி மோதி கோர விபத்து: 5 பேர் சம்பவ இடத்திலேயே நசுங்கி பலி
- சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது லாரி ஏறியதால் பலரும் அதன் சக்கரத்தில் சிக்கினர்.
- விபத்து குறித்து கொடுங்கல்லூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜூ மற்றும் வாழப்பாடி போலீசார் விசாரணை நடத்தினர்.
திருவனந்தபுரம்:
கேரளா - தமிழ்நாடு எல்லை அருகே உள்ள பாலக்காடு கோவிந்தபுரத்தை சேர்ந்தவர் காளியப்பன் (வயது 50). இவர் மேலும் சிலருடன் சேர்ந்து திருச்சூர் பகுதியில் நாடோடியாக வாழ்ந்து வந்தார். அவர்கள் நாட்டிகா என்ற இடத்தில் இரவு சாலையோரம் தூங்கி வந்தனர்.
நேற்று இரவும் அவர்கள் ஒரு கும்பலாக அங்கு படுத்திருந்தனர். அந்த பகுதியில் சாலை பணி நடப்பதால் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனவே அங்கு வாகனங்கள் எதுவும் வராது என்ற நம்பிக்கையில் 25-க்கும் மேற்பட்டோர் அங்கு தூங்கிக் கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் அவர்கள் படுத்திருந்த பகுதிக்கு எதிர்புறம் இன்று அதிகாலை 4 மணிக்கு மரக்கட்டைகள் ஏற்றிய லாரி சென்றுள்ளது. அந்த லாரி எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி உள்ளது.
அதே வேகத்தில் சாலையின் நடுவே இருந்த தடுப்புச்சுவரை இடித்துக்கொண்டு எதிர்புறம் பாய்ந்துள்ளது. அங்கு சாலையோரம் படுத்திருந்தவர்கள் மீது லாரி ஏறியது. என்ன நடந்தது என்று தெரியாமல் லாரியின் அடியில் சிக்கிக்கொண்டவர்கள் அலறினர். ஆனால் சிறிது தூரம் சென்ற பிறகே லாரி நின்றுள்ளது.
சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது லாரி ஏறியதால் பலரும் அதன் சக்கரத்தில் சிக்கினர். மேலும் சிலர் சாலையின் பல பகுதிகளிலும் தூக்கி வீசப்பட்டனர். இதனால் அந்த பகுதி போர்க்களம் போல காணப்பட்டது.
விபத்தில் சிக்கியவர்கள் எழுப்பிய கூக்குரல் அந்த பகுதி முழுவதும் எதிரொலித்ததால் அந்தப்பகுதி மக்கள் அங்கு திரண்டனர். அப்போது சாலை முழுவதும் மனித உடல்கள் சிதறி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து போலீசாருக்கும் 108 ஆம்புலன்சுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடம் விரைந்து வந்தனர். போலீசாரும், பகுதி மக்களும் மீட்பு பணியில் வேகமாக ஈடுபட்டனர். இருப்பினும் இந்த விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகி விட்டனர்.
மேலும் 11 பேர் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டி ருந்தனர். அவர்கள் ஆம்புலன்சு மூலம் உடனடியாக ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களில் 7 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால், அவர்கள் திருச்சூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து குறித்து கொடுங்கல்லூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜூ மற்றும் வாழப்பாடி போலீசார் விசாரணை நடத்தினர். லாரி டிரைவர் கண்ணூர் அலெக்ஸ் (33), கிளீனர் ஜோஸ் (54) ஆகியோரை கைது செய்தனர். கண்ணூரில் இருந்து மரக்கட்டை பாரம் ஏற்றிக் கொண்டு லாரி வந்துள்ளது.
விபத்துக்கு காரணம் டிரைவர் தூங்கியதா? அல்லது மதுபோதையில் வந்தாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் விபத்தில் பலியானவர்கள் காளியப்பன், நாகம்மா (39), பங்காழி (20), ஜீவன் (4), விஷ்வா (11) என தெரியவந்துள்ளது. இவர்கள் ஓரே குடும்பத்தை சேர்ந்தவர்களா? அல்லது வேறு வேறு பகுதிகளை சேர்ந்தவர்களா? என்ற விவரம் தெரிய வரவில்லை. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.