என் மலர்
இந்தியா
மதுபான ஆலைகளுக்கு அனுமதி வழங்கிய கேரள அரசு: கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் காங்கிரஸ்
- அனுமதி வழங்கப்பட்ட ஒயாசிஸ் நிறுவனம் மீது டெல்லியில் மதுபான மோசடி வழக்கு உள்ளது.
- பஞ்பாப் மாநிலத்தில் நிலத்தடி நீரை மாசுப்படுத்தியதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கேரளா மாநிலத்தில் மதுபான தொழிற்சாலைகள் அமைக்க அனுமதி வழங்கக் கூடாது என கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. இந்த கொள்கை கடந்த 25 வருடமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்தான் பினராயி விஜயன் தலைமையிலான அரசு மதுபான தொழிற்சாலை தொடங்க அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சி தலைவர் வி.டி. சதீஷன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும், கொள்கையை மீறியதாக அரசு மீது குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக கேரள சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் தலைவருமான வி.டி. சதீஷன் கூறியதாவது:-
கடந்த 25 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த கொள்கையை அரசு மீறியுள்ளதாக நாங்கள் குற்றச்சாட்டை வைத்துள்ளோம். மதுபான தொழிற்சாலை தொடங்க ஒயாசிஸ் (Oasis) நிறுவத்தினத்திற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
டெல்லியில் இந்த நிறுவனம் மதுபான முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு உள்ளது. பஞ்சாபில் ஒயாசிஸ் நிறுவனத்தின் ஆலை அமைந்துள்ள இடத்தில் நிலத்தடி நீர் மற்றும் மேற்பரப்பு நீரை மாசுபடுத்தியதாக பஞ்சாப் மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்திற்கு அரசு உரிமம் வழங்கியுள்ளதில் ஊழல் நடைபெற்றுள்ளது தெளிவாக தெரிகிறது. கலால் துறை அமைச்சரிடமிருந்து ஒரு தகுந்த பதிலை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு சதீஷன் தெரிவித்தார்.