என் மலர்
இந்தியா
கேரளாவை மினி பாகிஸ்தான் என்பதா?- மகாராஷ்டிர மாநில மந்திரிக்கு பினராயி விஜயன் கண்டனம்
- கேரளா என்பது ஒரு மினி பாகிஸ்தான். அதனால்தான் ராகுல் காந்தியும் அவரது தங்கையும் அங்கு போட்டியிட்டு வெற்றி பெறுகின்றனர்.
- பயங்கரவாதிகள் அனைவரும் அவர்களுக்கு வாக்களித்துள்ளனர்- மகாராஷ்டிர மாநில மந்திரி.
பா.ஜ.க.வை சேர்ந்த மகாராஷ்டிரா மாநில மந்திரி நிதேஷ் ரானா "கேரளாவில் இந்துக்களின் மக்கள் தொகை குறைந்து கொண்டே வருகிறது. இந்துக்கள் மதமாற்றம் செய்யப்படுகின்றனர். இந்து பெண்கள் லவ் ஜிகாத் டார்கெட் செய்யப்படுகின்றனர். பாகிஸ்தானில் இந்துக்கள் நடத்தப்படுவதை போலதான் கேரளாவிலும் நடத்தப்படுகின்றனர்.
பயங்கரவாத அமைப்புகளிடம் இருந்து ஆதரவு கிடைப்பதால்தான் ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.
கேரளா என்பது ஒரு மினி பாகிஸ்தான். அதனால்தான் ராகுல் காந்தியும் அவரது தங்கையும் அங்கு போட்டியிட்டு வெற்றி பெறுகின்றனர். பயங்கரவாதிகள் அனைவரும் அவர்களுக்கு வாக்களித்துள்ளனர்" எனக் கூறியிருந்தார்.
கேரளாவை மினி பாகிஸ்தான் எனக் கூறியதற்கு கேரள மாநில முதல்வர் பினராயி விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பினராயி விஜயன் எக்ஸ் பக்க பதிவில் கூறியிருப்பதாவது:-
மகாராஷ்டிர மாநில மந்திரி கேரளாவை மினி பாகிஸ்தான் என அழைத்திருப்பது மிகவும் தீங்கிழைக்கக் கூடியது. மற்றும் கண்டிக்கத்தக்கது.
மதச்சார்பின்மை மற்றும் மத நல்லிணக்கத்தின் கோட்டையான கேரளாவிற்கு எதிராக சங் பரிவாரத்தால் நடத்தப்படும் வெறுப்பு பிரச்சாரங்களை இதுபோன்ற சொல்லாட்சிகள் பிரதிபலிக்கின்றன.
கேரளா மீதான இந்த கொடூரமான தாக்குதலை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம், மேலும் சங் பரிவாரின் வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக அனைத்து ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற சக்திகளும் ஒன்றுபட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு பினராயி விஜயன் தனது கண்டனத்தில் தெரிவித்துள்ளார்.