என் மலர்
இந்தியா
கடுமையான சட்டம் உருவாக்கப்பட்டது பெண்களை பாதுகாக்க... கணவரை மிரட்டி பணம் பறிக்க அல்ல.. உச்சநீதிமன்றம் காட்டம்
- பெண்கள் கைகளில் உள்ள இந்த கடுமையான சட்ட விதிகள் அவர்களுக்கு நன்மை பயக்கும் சட்டங்கள்.
- கணவர்களைத் தண்டிக்க, அச்சுறுத்த, ஆதிக்கம் செலுத்த அல்லது மிரட்டி பணம் பறிக்க அல்ல.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதான அதுல் சுபாஷ் என்ற ஐ.டி. ஊழியர் கடந்த திங்களன்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மரணத்துக்கு முன் செய்ய வேண்டியவை என்று அட்டவணை போட்டு அதை ஒவ்வொன்றாக முடித்துவிட்டு கடைசியில் அவர் தற்கொலை செய்துள்ளார்.
24 பக்க தற்கொலை குறிப்பை எழுதி வைத்ததுடன், 90 நிமிட வீடியோவைப் பதிவு செய்து வைத்து தற்கொலை செய்து கொண்டார். அந்த பதிவில், தன் மீதும் தனது குடும்பத்தினர் மீது தனது மனைவி நிகிதா சிங்கானியா மற்றும் அவரது குடும்பத்தினர் பல்வேறு பொய் வழக்குகளைப் போட்டுள்ளதாகக் குற்றம் சாட்டினார். மேலும் தனது குழந்தையை பார்ப்பதற்கு அனுமதிப்பதில்லை எனவும் குற்றம்சாட்டியிருந்தார்.
விவாகரத்து பெற்ற மனைவி மற்றும் மகனுக்குப் பராமரிப்பு தொகையாக மாதம் ரூ.2 லட்சம் வழங்க வேண்டும் என்று தன்னை அவர்கள் வற்புறுத்துவதாகத் தெரிவித்தார்.
அதுல் சுபாஷ் தற்கொலை நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. திருமணம் முடிந்த பெண்கள் கணவனை மிரட்டி பணம் பறிக்க வரதட்சணை கொடுமை சட்டத்தை தவறாக பயன்படுத்துவதாக பரவலாக குற்றம்சாட்டப்பட்டது.
இது தொடர்பாக உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தி வந்தது.
நேற்று நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் பங்கஜ் மிதல் ஆகியோர் முன் இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அவர்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்தனர்.
"ஒரு இந்து திருமணம் ஒரு குடும்பத்திற்கான அடித்தளமாக ஒரு புனிதமானதாக கருதப்பட்டது என்றும், அது ஒரு வணிக முயற்சி அல்ல" என்று குறிப்பிட்டனர்.
மேலும், "பாலியல் வன்கொடுமை, குற்றவியல் மிரட்டல் மற்றும் திருமணமான பெண்ணை கொடுமைப்படுத்துதல் உள்ளிட்ட இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளைப் பயன்படுத்துவது பெரும்பாலான திருமண தகராறுகள் தொடர்பான புகார்களில் ஒருங்கிணைந்த தொகுப்பாகியுள்ளது என உச்ச நீதிமன்றத்தால் பல சந்தர்ப்பங்களில் கண்டிக்கப்பட்டது.
பெண்கள் கைகளில் உள்ள இந்த கடுமையான சட்ட விதிகள் அவர்கள் நலனுக்கான நன்மை பயக்கும் சட்டங்கள். தங்கள் கணவர்களைத் தண்டிக்க, அச்சுறுத்த, ஆதிக்கம் செலுத்த அல்லது மிரட்டி பணம் பறிப்பதற்கான கருவி அல்ல என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
குற்றவியல் சட்டத்தில் உள்ள விதிகள் பெண்களின் பாதுகாப்பு மற்றும் அதிகாரமளிப்புக்கானவை. ஆனால் சில சமயங்களில் சில பெண்களால் அவை ஒருபோதும் அந்த நோக்கங்களுக்கு இல்லாத வகையில் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன." என்று தெரிவித்தனர்.