என் மலர்
இந்தியா
டெல்லி மாநகராட்சி நிலைக்குழு உறுப்பினர் தேர்தலில் அமளி- மேஜை மீது ஏறி நின்று முழக்கமிட்ட தலைவர்கள்
- ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த ஷெல்லி ஓபராய் மேயராகவும், ஆலே முகமது இக்பால் துணை மேயராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
- நிலைக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைமுறைகள் தொடங்கியவுடன் அவையில் கடும் அமளி ஏற்பட்டது.
புதுடெல்லி:
டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றியது. எனினும் நியமன உறுப்பினர்களுக்கான வாக்குரிமை குறித்த சர்ச்சை, ஆம் ஆத்மி- பாஜக மோதல், நீதிமன்ற வழக்கு காரணமாக மேயர் தேர்தலை நடத்துவது தொடர்ந்து தள்ளிப்போனது. பின்னர் நீதிமன்ற உத்தரவின்பேரில், மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் தேர்தல் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடந்தது. ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த ஷெல்லி ஓபராய் மேயராகவும், ஆலே முகமது இக்பால் துணை மேயராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
ஆனால் 6 நிலைக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைமுறைகள் தொடங்கியவுடன் அவையில் கடும் அமளி ஏற்பட்டது. பா.ஜ.க. கவுன்சிலர்கள் தேர்தலை நடத்தவிடாமல் அமளி செய்தனர். இதனால் ஆம் ஆத்மி, பா.ஜ.க. இடையே மோதல் ஏற்பட்டது இதனால், நேற்று தேர்தல் நடத்தப்படாமலேயே அவை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று மீண்டும் அவை கூடியதும் நிலைக்குழு உறுப்பினர் தேர்தல் நடைபெற்றது. ஆம் ஆத்மி கட்சி சார்பில் 4 வேட்பாளர்களும், பாஜக சார்பில் 2 வேட்பாளர்களும் நிறுத்தப்பட்டனர். பாஜகவில் இணைந்த சுயேட்சை உறுப்பினர் கஜேந்தர் சிங் தரளும் வேட்பாளராக போட்டியிட்டார். 6 நிலைக்குழு உறுப்பினர் பதவிகளுக்கு 7 பேர் போட்டியிட்டனர்.
வாக்குப்பதிவு முடிந்து வாக்கு எண்ணிக்கையின்போது ஒரு உறுப்பினரின் வாக்கு செல்லாது என மேயர் அறிவித்தார். இதனை ஏற்க மறுத்த பாஜக உறுப்பினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதேசமயம், மறு வாக்கு எண்ணிக்கையை அனுமதிக்க மாட்டோம் எனவும் தெரிவித்தனர்.
பாஜக உறுப்பினர்கள் ஜெய் ஸ்ரீராம், பிரதமர் மோடி வாழ்க என முழக்கமிட்டனர். பதிலுக்கு ஆம் ஆத்மி உறுப்பினர்களும் கெஜ்ரிவாலை வாழ்த்தி முழக்கமிட்டனர். இரு தரப்பினரும் மேஜை மீது ஏறி நின்று கூச்சலிட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.
மாநகராட்சியை நிதியை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்? எந்தெந்த திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட வேண்டும்? என்பதை நிலைக்குழுவே தீர்மானிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.