search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் தொடங்கியது- ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
    X

    மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் தொடங்கியது- ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

    • மன்மோகன்சிங் கின் உடல் தகனம் முழு அரசு மரியாதையுடன் யமுனை ஆற்றின் கரையில் அமைந்துள்ள நிகம்போத் காட் பகுதியில் நடத்தப்படும் என்று அறிவித்தது.
    • மன்மோகன் சிங் வீட்டில் இருந்து காங்கிரஸ் அலுவலகம் வரை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

    புதுடெல்லி:

    2004-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை 2 தடவை பிரதமராக இருந்து நாட்டை வழி நடத்தியவர் மன்மோகன் சிங்.

    பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து அவர் தீவிர அரசியலில் ஈடுபடாமல் வீட்டில் இருந்து வந்தார்.

    92 வயதான அவருக்கு வயது முதிர்வு காரணமாக கடந்த சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் மாலை அவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் சுய நினைவை இழந்து மயங்கி விழுந்தார்.

    இதையடுத்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அன்று இரவு 9.51 மணிக்கு அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். அவரது உடல் அன்று இரவு டெல்லி மோதிலால் நேரு மார்க் பகுதியில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

    அவரது உடல் வீட்டின் முன் அறையில் வைக்கப்பட்டது. அவர் உடல் இருந்த பெட்டி தேசிய கொடியால் போர்த்தப்பட்டு இருந்தது. நேற்று காலை முதல் தலைவர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

    ஜனாதிபதி திரவுபதி முர்மு, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத்சிங், பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே.

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, முதல்-மந்திரிகள் மு.க. ஸ்டாலின், சந்திரபாபு நாயுடு, ரேவந்த் ரெட்டி, முன்னாள் முதல்-மந்திரிகள் அகிலேஷ் யாதவ், கெஜ்ரி வால் உள்பட ஏராளமானவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். இதையடுத்து இன்று (சனிக்கிழமை) மன்மோகன் சிங் உடல் தகனம் செய்யப்படும் என்று காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்டது.

    மன்மோகன்சிங் மறைவை தொடர்ந்து நேற்று மத்திய மந்திரிசபை கூடி இரங்கல் தெரிவித்தது. அதோடு ஜனவரி 1-ந்தேதி வரை ஒரு வாரம் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. மேலும் மன்மோகன்சிங் கின் உடல் தகனம் முழு அரசு மரியாதையுடன் யமுனை ஆற்றின் கரையில் அமைந்துள்ள நிகம்போத் காட் பகுதியில் நடத்தப்படும் என்று அறிவித்தது.

    இதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மன்மோகன்சிங் உடல் தகனம் செய்யும் இடத்தில் அவருக்கு நினைவிடம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. ஆனால் நிர்வாக ரீதியாக அதில் தாமதம் ஏற்படும் என்பதால் காங்கிரஸ் கோரிக்கை ஏற்கப்படவில்லை.


    இன்று (சனிக்கிழமை) காலை 8.30 மணிக்கு பிறகு மன்மோகன்சிங் உடல் டெல்லி மோதிலால் நேரு மார்க் பகுதியில் உள்ள அவரது வீட்டில் இருந்து அக்பர்சாலை எண்.24-ல் உள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. இதையொட்டி மன்மோகன்சிங் வீட்டில் இருந்து காங்கிரஸ் அலுவலகம் வரை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

    இன்று காலை 7 மணி முதல் அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தன. அக்பர் சாலையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தை அடைந்ததும் அங்கு மன்மோகன்சிங் உடல் பொதுமக்கள் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

    8.30 மணி முதல் பொதுமக்களும், காங்கிரசாரும் மன்மோகன் சிங் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.





    அதன் பிறகு சுமார் 10 மணி அளவில் மன்மோகன்சிங் உடல் காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்து இறுதி ஊர்வலம் தொடங்கியது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் முழு அரசு மரியாதையுடன் மன்மோகன் சிங் உடல் ஊர்வலமாக யமுனை நதிக்கரைக்கு கொண்டு செல்லப்படுகிறது. இறுதி ஊர்வலத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அனைவரும் பங்கேற்று உள்ளனர்.


    Next Story
    ×