என் மலர்
இந்தியா
வீட்டின் மாடியில் படித்துக்கொண்டிருந்த சிறுமியை கீழே தள்ளிவிட்டுக் கொன்ற குரங்குகள்
- பீதியில், கீழே இறங்க படிக்கட்டுகளை நோக்கி பிரியா ஓடினாள்.
- சிறுமி மீது ஆக்ரோஷமாக பாய்ந்து அவளை கடுமையாகத் தள்ளியது
பீகாரில் வீட்டின் மாடியில் படித்துக்கொண்டிருந்த 10 ஆம் வகுப்பு மாணவி குரங்குகளால் கீழே தள்ளிவிடப்பட்டு உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பீகாரின் வைசாலி மாவட்டத்தில் பகவான்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மகர் கிராமத்தை சேர்த்தவர் 10 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி பிரியா.
குடும்பத்தினர் கூற்றுப்படி, குளிரான கிளைமேட்டால், நேற்று [சனிக்கிழமை] பிற்பகல், சிறுமி பிரியா வீட்டின் மொட்டை மாடியில் அமர்ந்து படித்துக்கொண்டிருந்தாள். அப்போது குரங்கு கூட்டம் ஒன்று அங்கு வந்துள்ளது. பீதியில், கீழே இறங்க படிக்கட்டுகளை நோக்கி பிரியா ஓடினாள். ஆனால் சிறுமியை விடாமல் குரங்குகள் துரத்தியுள்ளன.
அப்போது ஒரு குரங்கு சிறுமி மீது ஆக்ரோஷமாக பாய்ந்து அவளை கடுமையாகத் தள்ளியது. இதன் காரணமாக சிறுமி நிலை தடுமாறி மாடியில் இருந்து கீழே விழுந்தாள். சிறுமியின் தலையின் பின்புறம் மற்றும் உடலின் பிற பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது.
மயக்கமடைந்த சிறுமி பிரியாவை, குடும்பத்தினர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சைப் பலனின்றி சிறுமி பிரியா உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் கிராமத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. வெகு காலமாக அப்பகுதியில் குரங்குகள் தொல்லை அதிகம் உள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.