என் மலர்
இந்தியா
முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: தேசிய அளவில் நிபுணர் குழு அமைக்காதது ஏன்? மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
- முல்லைப்பெரியாறு அணையில் பாதுகாப்பை ஆராய நிபுணர் குழுவை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது.
- அணை பாதுகாப்பு சட்டத்தில் மேற்பார்வை குழு அமைக்க கூறவில்லை.
புதுடெல்லி:
கேரளாவை சேர்ந்த மேத்யு நெடும்பாறா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், 'வயநாட்டில் ஏற்பட்டது போன்ற பேரிடர் முல்லைப்பெரியாறு அணை பகுதியில் ஏற்பட்டால் கடுமையான உயிர்சேதம் ஏற்பட்டு சுமார் 60 லட்சம் உயிர்கள் பாதிக்கப்படும். இதுபோன்ற பேரிடரை தடுக்க தற்காலிகமாக முல்லைப் பெரியாறு அணையில் தேக்கி வைக்கும் நீரின் அளவை 120 அடியாக குறைக்க உத்தரவிட வேண்டும். இதன் நீண்ட கால தீர்வாக முல்லைப் பெரியாறு அணையின் 50-வது அடியில் சுரங்கம் அமைத்து நீரை எடுத்து வைகை அணையில் விட வேண்டும். இதற்காக வைகை அணையின் நீரை தேக்கி வைக்கும் பரப்பை அதிகரிக்க வேண்டும்' என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு நேற்று விசாரித்தது. தமிழ்நாடு அரசின் சார்பில் வக்கீல் டி.குமணனுடன் கூடுதல் அட்வகேட் ஜெனரல் வி.கிருஷ்ணமூர்த்தி ஆஜராகி, இந்த விவகாரம் தொடர்பான பின்னணியை எடுத்துரைத்தார். குறிப்பாக அணை பாதுகாப்பு சட்டம் உருவாக்கப்பட்டு உள்ளதையும், அணை பாதுகாப்புக்கான தேசிய குழு அணையில் பாதுகாப்பை உறுதி செய்யும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும் முல்லைப்பெரியாறு அணையில் பாதுகாப்பை ஆராய நிபுணர் குழுவை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது. இதற்கு தேசிய அணை பாதுகாப்பு ஆணையத்தில் தலைவர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள புதிய குழுவின் கூட்டம் ஜனவரி 10-ந்தேதி (அதாவது நாளை) கூட்டத்தில் ஒப்புதல் பெற வேண்டியுள்ளது என்று வாதிட்டார்.
கேரள அரசின் சார்பில் மூத்த வக்கீல் ஜெய்தீப் குப்தா ஆஜராகி, அணை பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வந்த பிறகு, எதையும் மத்திய அரசு செய்யவில்லை என வாதிட்டார்.
வாதத்தைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், 'முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்கும் யோசனையை தெரிவித்தனர். மேலும், அணை பாதுகாப்பு சட்டத்தின் படி, சட்டம் நடைமுறைக்கு வந்த 60 நாட்களுக்குள் அணை பாதுகாப்புக்கான தேசிய குழுவை ஏற்படுத்த வேண்டும். இக்குழு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றி அமைக்க வேண்டும்.
இதுபோன்ற சட்டம் இருந்தும், அணை பாதுகாப்புக்கான தேசிய குழுவை அமைக்காமல் இருப்பது ஆழமான உறக்கத்தில் இருந்து மத்திய அரசு எழவில்லை என்பதை காட்டுகிறது. இது திகைப்பை அளிப்பதாக உள்ளது.
அணை பாதுகாப்பு சட்டத்தில் மேற்பார்வை குழு அமைக்க கூறவில்லை. முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே மேற்பார்வை குழுவை அமைத்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பின்படி மேற்பார்வை குழுவை மத்திய அரசு அமைத்திருக்க வேண்டும். இந்த மனு தொடர்பாக மத்திய அரசு பதில் அளிக்கவும், அணை பாதுகாப்புக்கான தேசிய குழுவின் பொறுப்புகள் குறித்து கேட்டு சுப்ரீம் கோர்ட்டுக்கு தெரிவிக்க மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் உதவ வேண்டும் என்றும் உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 22-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர்.