என் மலர்
இந்தியா
டெல்லி சட்டமன்ற தேர்தல்: 11 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட தேசியவாத காங்கிரஸ்
- ஆம் ஆத்மி கட்சி 70 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
- காங்கிரஸ் 47 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
டெல்லி மாநில சட்டமன்ற தேர்தல் பிப்ரவரி மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக ஆகிய மூன்று கட்சிகளும் தனித்து போட்டியிடுகின்றன. ஆம் ஆத்மி கட்சி 70 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. காங்கிரஸ் இரண்டு கட்டமாக 47 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
பா.ஜ.க. இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சி 11 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி முக்கிய கட்சியாக திகழ்ந்து வருகிறது.
சமீபத்தில் முடிவடைந்த மகாராஷ்டிரா மாநில தேர்தலில் பாஜக, தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ள நிலையில், பாஜக 70 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தால் தேசியவாத காங்கிரஸ்- பாஜக வேட்பாளர்கள் நேருக்குநேர் மல்லு கட்ட வேண்டியிருக்கும்.
தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே தேசியவாத காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை அறிவித்த நிலையில், பாஜகவுடன் உடன்பாடு ஏற்பட்டது வேட்பாளர்களை வாபஸ் வாங்க வாய்ப்புள்ளது. அல்லது தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு சில தொகுதிகளை ஒதுக்கலாம்.
டெல்லி காங்கிரஸ் தலைவர் தேவேந்தர் யாதவை எதிர்த்து பாட்லி தொகுதியில் முலாயம் சிங் என்பவரை நிறுத்தியுள்ளது. புராரி தொகுதியில் ரத்தன் தியாகி, சண்ட்னி சவுக் தொகுதியில் காலித் உர் ரஹ்மான், ஒக்லா தொகுதியில் இம்ரான் ஷைபியை நிறுத்தியுள்ளது.