என் மலர்
இந்தியா
பாடையில் தூக்கி சென்ற போது திடீரென எழுந்த முதியவர்
- வீட்டிற்கு கொண்டுவரப்பட்ட அப்பாராவ் உடலை பார்த்து அவரது உறவினர்கள் கதறி அழுதனர்.
- துக்க நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டம், ஜிசிகடம், சுதம்பேட்டையை சேர்ந்தவர் அப்பாராவ் (வயது 85). வயது முதிர்வு காரணமாக உடல்நல குறைவால் அவதி அடைந்து வந்தார்.
அப்பாராவை அவரது உறவினர்கள் ஸ்ரீகாகுளத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
நீண்ட நாட்களாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அப்பாராவ் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
இதனால் டாக்டர்கள் அப்பாராவை வீட்டிற்கு கொண்டு செல்லுமாறு தெரிவித்தனர்.
இதையடுத்து அப்பாராவை அவரது உறவினர்கள் ஆம்புலன்சில் கொண்டு வந்தனர். வரும் வழியில் அவரது உடல் அசையவில்லை. அவர் இறந்து விட்டதாக குடும்பத்தினர் நினைத்தனர். இது குறித்து வரும் வெளியிலேயே உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
வீட்டிற்கு கொண்டுவரப்பட்ட அப்பாராவ் உடலை பார்த்து அவரது உறவினர்கள் கதறி அழுதனர். இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகள் செய்தனர்.
அப்பாராவின் உடலை கழுவி சுத்தம் செய்து சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்வதற்காக அவரது உடலை பாடையில் தூக்கி வைத்தனர். அதனை தூக்கி சென்றனர்.
அப்போது அப்பாராவ் திடீரென கண் திறந்து, கால்களை அசைத்தபடி எழுந்து உட்கார்ந்தார்.
இதனைக் கண்டு அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் துக்க நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.