என் மலர்
இந்தியா

மக்களவையில் மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சிக்கு ஒப்புதல் கோரும் தீர்மானம் மீது ஒரு மணி நேரம் விவாதம்

- மணிப்பூர் மாநில கலவரத்துக்கு பைரன் சிங்கிற்கு தொடர்பு உள்ளதாக சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக ஆடியோ வெளியானது.
- இதனைத் தொடர்ந்து பைரன் சிங் ராஜினாமா செய்தார். கடந்த மாதம் 13-ந்தேதி ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவதற்கான ஒப்புதல் கோரும் சட்டப்பூர்வ தீர்மானத்தின் மீது மக்களவையில் ஒரு மணி நேர விவாதம் நடைபெறும் என மக்களவை சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற மக்களவை அலுவல் ஆலோசனைக் குழுவில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், வருகிற 13-ந்தேதி ஹோலி பண்டிகையை முன்னிட்டு மக்களவை கூட்டம் ரத்து செய்யப்பட்டு, அதை ஈடுகட்டும் வகையில் மார்ச் 29-ந்தேதி சனிக்கிழமை அவையை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
ரெயில்வே குறித்த விவாதத்திற்கு 10 மணிநேரமும், ஜல் சக்தி அமைச்சகங்களின் மானியக் கோரிக்கைகள், விவசாயம் மற்றும் விவசாயிகள் நலன் குறித்த விவாதங்களுக்கு தலா ஒரு நாளும் ஒதுக்கப்பட்டுள்ளது. நிதி மசோதா குறித்த விவாதத்திற்கு 8 மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மணிப்பூரில் கடந்த 2023-ம் ஆண்டு மெய்தி- குகி ஆகிய இரண்டு பிரிவினருக்கு இடையில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் பின்னர் வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறையில் வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டது. பொதுச் சொத்துகள் சேதப்படுத்தப்பட்டது. பல்வேறு இடங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. பெரும்பாலான மக்கள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அண்டை மாநிலத்திலும் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இதற்கிடையே மாநிலத்தில் நடந்த கலவரத்துக்கு ஆளும் பாஜக முதல்வர் பைரன் சிங்கிற்கு தொடர்பு உள்ளதாக சர்ச்சை எழுந்தது. இதுதொடர்பாக ஆடியோ பதிவுகள் வெளியாகின. இவை சித்தரிக்கப்பட்டவை என ஆளும் பாஜக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால் போராட்டக்குழுக்கள் இதை ஏற்க மறுத்தது.
ஆடியோ பதிவுகளை முன்வைத்து சுதந்திரமான விசாரணை நடத்தக்கோரி குகி அமைப்பினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு சஞ்சீவ் கண்ணா, சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, குற்றம்சாட்டப்பட்ட முதல்வர் பைரன் சிங் உரையாடல் அடங்கிய ஆடியோ டேப்புகளை ஆய்வு செய்து அதுகுறித்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு, மத்திய தடயவியல் ஆய்வகததிற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், வழக்கு விசாரணையை மார்ச் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
மணிப்பூர் கலவரத்திற்கு பாஜக முதல்வர் பைரன் சிங்கிற்கு தொடர்பு உள்ளதாக ஆடியோ பதிவுகள் வெளியான நிலையில், தனது முதல்வர் பதவியை பைரன் சிங் கடந்த மாதம் 9-ந்தேதி ராஜினாமா செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 13-ந்தேதி ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படுவதாக 13-ந்தேதி மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதனைத் தொடர்ந்து மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.