என் மலர்
இந்தியா

பங்குனி மாத பூஜைக்காக கோவில் நடை திறப்பு- சபரிமலையில் புதிய வழிபாட்டுமுறை அமல்

- நேரடி தரிசனம் மூலம் பக்தர்களுக்கு முழுமையான ஐயப்ப தரிசனம் கிடைக்கும்.
- நாளை முதல் 19-ந்தேதி வரை தினமும் பல்வேறு பூஜை, வழிபாடுகள் நடைபெறுகிறது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பங்குனி மாத பூஜைக்காக நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.
தந்திரி கண்டரரு ராஜீவரரு, பிரம்மதத்தன் முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்தினார்.
தொடர்ந்து நாளை முதல் 19-ந்தேதி வரை தினமும் பல்வேறு பூஜை, வழிபாடுகள் நடைபெறுகிறது. 19-ந்தேதி இரவு அத்தாழ பூஜைக்கு பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்படும்.
முன்னதாக, "பங்குனி மாத பூஜை முதல் பக்தர்கள் 18-ம் படி ஏறி கொடி மரத்தில் இருந்து நேராக, கோவிலுக்குள் நுழைந்து சாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதன்காரணமாக பக்தர்கள் மேம்பாலத்தை சுற்றி வந்து தரிசனம் செய்வதற்கான நேரம் மிச்சமாகும் என திருவனந்தபுரத்தில் திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர், "பக்தர்கள் கூடுதல் நேரம் ஐயப்பனை தரிசிக்க வாய்ப்பு கிடைக்கும். தற்போது வரை 80 சதவீதம் பக்தர்களுக்கு முழுமையான ஐயப்ப தரிசனம் கிடைப்பது இல்லை என்ற நிலை இருந்து வந்தது. நேரடி தரிசனம் மூலம் பக்தர்களுக்கு முழுமையான ஐயப்ப தரிசனம் கிடைக்கும்" என தெரிவித்தார்.
சபரிமலையில், பங்குனி ஆராட்டு திருவிழாவையொட்டி ஏப்ரல் 1-ந்தேதி மாலையில் மீண்டும் நடை திறக்கப்படும் என்றும் 2-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் ஆராட்டு விழா தொடங்குகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 11-ந்தேதி ஆராட்டுடன் விழா நிறைவு பெறும் என கூறப்பட்டுள்ளது.