என் மலர்
இந்தியா
ஸ்மிருதி இரானி முதல் அண்ணாமலை வரை... தோல்வியை தழுவிய நட்சத்திர வேட்பாளர்கள்
- கடந்த தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம் அமேதியில் வெற்றி பெற்ற ஸ்மிரிதி இரானி, இம்முறை அத்தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.
- மேனகா காந்தி சுல்தான்பூர் தொகுதியில் சமாஜ்வாதி வேட்பாளர் ராம்புவால் நிஷாத்துக்கு எதிராக 43,174 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான கூட்டணி 296 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. இதில் பா.ஜனதா மட்டும் 240 இடங்களை கைப்பற்றியுள்ளது.
அதே சமயத்தில் மத்திய மந்திரிகள் சிலர் எதிர்பாராத தோல்வியை தழுவி உள்ளனர்.
பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் அமேதி வேட்பாளர் கிஷோரி லால் சர்மா 1.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக எம்பியும் மத்திய அமைச்சருமான ஸ்மிருதி இரானியை தோற்கடித்து மாபெரும் வெற்றி பெற்றுள்ளார்.
கடந்த தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம் அமேதியில் வெற்றி பெற்ற ஸ்மிரிதி இரானி, இம்முறை அத்தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்தார். தேர்தல் கமிஷன் தகவலின்படி, சர்மா 5,39,228 வாக்குகளையும், இரானி 3,72,032 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
மேற்கு வங்க மாநிலம் பஹரம்பூர் தொகுதியில், முதன்முறையாக போட்டியிட்ட திரிணாமுல் காங்கிரசின் யூசுப் பதான், காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியை பஹரம்பூரில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான இவர் 85,022 வாக்குகள் வித்தியாசத்தில் 6 முறை எம்.பி.யான ஆதிர் ரஞ்சன் சவுத்ரியை தோற்கடித்துள்ளார்.
பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மேனகா காந்தி சுல்தான்பூர் தொகுதியில் சமாஜ்வாதி வேட்பாளர் ராம்புவால் நிஷாத்துக்கு எதிராக 43,174 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கோவையில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரிடம் 1,18,068 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
2024 பாராளுமன்ற தேர்தலில் 543 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையில் 240 இடங்களைக் கைப்பற்றி பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், கடந்த முறை எட்டிய 303 இடத்தில் இருந்து வெகு தொலைவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.