search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பாராளுமன்றம் இன்று கூடுகிறது
    X

    பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பாராளுமன்றம் இன்று கூடுகிறது

    • மோடி தொடர்ந்து 3-வது முறையாக பிரதமராக பதவி ஏற்றதன் மூலம், நேருவின் சாதனையை சமன் செய்தார்.
    • புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்படும்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது. இந்த தேர்தல் முடிவுகள் கடந்த 4-ம் தேதி வெளியானது. மொத்தம் உள்ள 543 இடங்களில் பா.ஜனதா தனித்து 240 இடங்களை பெற்றது. காங்கிரஸ் கட்சி 99 இடங்களை கைப்பற்றியது. ஆட்சி அமைக்க தேவையான 272 இடங்கள் எந்த கட்சிக்கும் கிடைக்கவில்லை.

    அதேநேரம் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களை பெற்றதால், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்தது. இதையடுத்து கடந்த 9-ம் தேதி பிரதமர் மோடி, தலைமையிலான புதிய கூட்டணி அரசு பதவி ஏற்றது. பிரதமருடன் 72 மத்திய மந்திரிகளும் பதவி ஏற்றனர். மோடி தொடர்ந்து 3-வது முறையாக பிரதமராக பதவி ஏற்றதன் மூலம், நேருவின் சாதனையை சமன் செய்தார்.

    இதையடுத்து 18-வது பாராளுமன்றம் இன்று காலை கூடுகிறது. பாராளுமன்றத்துக்கு புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட 543 எம்.பி.க்களுக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெறும்.

    புதிய உறுப்பினர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பதற்கு ஏதுவாக தற்காலிக சபாநாயகராக பா.ஜனதாவை சேர்ந்த பர்த்ருஹரி மஹ்தாப் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் 7 முறை பாராளுமன்றத்துக்கு தேர்ந்து எடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    தற்காலிக சபாநாயகராக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள மஹ்தாபுக்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைப்பார். இந்த நிகழ்ச்சி ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும்.

    இதையடுத்து அவர் பாராளுமன்றத்துக்கு வந்து, காலை 11 மணிக்கு பாராளுமன்ற கூட்டத்தை முறைப்படி தொடங்கிவைப்பார். அதன்பிறகு மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறும்.

    பின்னர் மக்களவை பொதுச்செயலாளர் உத்பால் சிங், பாராளுமன்ற மக்களவைக்கு புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள எம்.பி.க்களின் பட்டியலை, அவை மேஜையில் வைப்பார்.

    அதன்பிறகு எம்.பி.க்கள் பதவி ஏற்கும் நிகழ்ச்சி தொடங்கும். முதலில் பிரதமர் மோடியை, எம்.பி.யாக பதவி ஏற்க வருமாறு அழைப்பு விடுக்கப்படும். அவருக்கு தற்காலிக சபாநாயகர் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்.

    சபாநாயகர் தேர்தல் நடைபெறும் வரை அவை நடவடிக்கைகளை மேற்கொள்வதில் தற்காலிக சபாநாயகருக்கு உதவுவதற்காக ஜனாதிபதியால் தலைவர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளது. அதன்படி கொடிகுன்னில் சுரேஷ் (காங்கிரஸ்), டி.ஆர்.பாலு (தி.மு.க.), ராதா மோகன் சிங் (பா.ஜனதா), பக்கன் சிங் குலாஸ்தே (பா.ஜனதா), சதீப் பந்தோப்பாத்யாய் (திரிணாமுல் காங்கிரஸ்) ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தற்காலிக சபாநாயகர் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார். தொடர்ந்து மந்திரிகளும் எம்.பி.க்களாக பதவி ஏற்பார்கள்.

    பின்னர் புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்படும்.

    புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட உறுப்பினர்கள், அகர வரிசைப்படி அழைக்கப்பட்டு பதவிப்பிரமாணம் எடுப்பார்கள்.

    இதையடுத்து நாளை மறுநாள் (புதன்கிழமை) மக்களவையின் புதிய சபாநாயகர் தேர்தல் நடைபெறும். இதுவரை ஒருமித்த கருத்து அடிப்படையிலேயே சபநாயகர் தேர்ந்து எடுக்கப்பட்டு வந்துள்ளார்.

    ஆனால் இந்தமுறை எதிர்க்கட்சிகள் அதிக பலத்துடன் இருப்பதால், ஆளும் கூட்டணிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், சபாநாயகர் தேர்தலில் ஆளும் கூட்டணி வேட்பாளருக்கு எதிராக இந்தியா கூட்டணியும் வேட்பாளரை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    அவ்வாறு எதிர்க்கட்சிகள் வேட்பாளரை நிறுத்தினால், சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடைபெறும்.

    இதன்பிறகு பிரதமர் மோடி, தனது மந்திரிகளை சபைக்கு அறிமுகம் செய்து வைப்பார்.

    மக்களவை மற்றும் மாநிலங்களவையின் கூட்டுக்கூட்டம் 27-ம் தேதி நடைபெறும். இதில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றுவார்.

    ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் ஜூன் 28-ம் தேதி தொடங்கும். ஜூலை 2 அல்லது 3-ம் தேதி விவாதத்திற்கு பிரதமர் மோடி பதில் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்பிறகு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக இரு அவைகளும் ஒத்திவைக்கப்படும். ஜூலை 22-ம் தேதி மீண்டும் பாராளுமன்றம் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    நாட்டையே பரபரப்பாக்கியுள்ள நீட் தேர்வு முறைகேடு விவகாரம் விசுவரூபம் எடுத்துள்ள பரபரப்பான சூழ்நிலையில், பாராளுமன்றம் கூடுகிறது.

    எனவே நீட் தேர்வு முறைகேடு, பல்கலைக்கழக பேராசிரியர் தேர்வு (நெட்) முறைகேடு, முதுகலை நீட் தேர்வு ரத்து உள்ளிட்டவை இந்த பாராளுமன்ற கூட்டத்தில் புயலை கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் வேலைவாய்ப்பு இன்மை, மாநிலங்களுக்கான நிதி பங்கீடு விவகாரம், சாதிவாரி கணக்கெடுப்பு, அக்னிவீர் திட்டம் ஆகியவற்றையும் எதிர்க்கட்சிகள் கையில் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த 2 முறையும் தனிப்பெரும்பான்மையுடன் பாராளுமன்றத்தில் பா ஜனதா இருந்ததால், எதிர்க்கட்சிகள் எழுப்பும் பிரச்சனைகளை எளிதில் சமாளித்து வந்தனர்.

    ஆனால் இந்த முறை எதிர்க்கட்சிகளின் பலம் அதிகரித்து உள்ளதால், பல்வேறு விவகாரங்களில் பாராளுமன்றத்தில் அனல் பறக்கும்.

    இதனிடையே பாராளுமன்ற தற்காலிக சபாநாயகர் தேர்ந்து எடுக்கப்பட்டதில் சர்ச்சை எழுந்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினரான கொடிகுன்னில் சுரேசுக்குதான் இந்த பதவி வழங்கப்பட்டு இருக்க வேண்டும். அவரே மிக மூத்த உறுப்பினர் என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. மற்ற எதிர்க்கட்சிகளும் காங்கிரசின் கருத்துக்கு ஆதரவு அளித்துள்ளது.

    இதற்கு பதில் அளித்த பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ, மஹ்தாப் தொடர்ந்து 7 முறை எம்.பி.யாக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார். அதே நேரம் கொடிகுன்னில் சுரேஷ் 1998 மற்றும் 2004 தேர்தல்களில் தோல்வி அடைந்துள்ளார். எனவே மஹ்தாப் தற்காலிக சபாநாயகராக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார் என்று கூறினார். ஆனால் இதனை எதிர்க்கட்சிகள் ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×