search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பாராளுமன்ற இரு அவைகளும் நாள்முழுவதும் ஒத்திவைப்பு
    X

    பாராளுமன்ற இரு அவைகளும் நாள்முழுவதும் ஒத்திவைப்பு

    • மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
    • மாநிலங்களை புதன்கிழமை காலை 11 மணிக்கு மீண்டும் கூடும் என அறிவிப்பு.

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. மராட்டியம், ஜார்க்கண்ட் மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ள பரபரப்பான சூழ்நிலையில் கூட்டம் தொடங்கியதால் சபை நடவடிக்கைகள் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் நிலவியது.

    கூட்டத்தை சுமூகமாக நடத்துவது தொடர்பாக நேற்று அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது. அப்போது பாராளுமன்றத்தில் அதானி விவகாரம் மற்றும் மணிப்பூர் கலவரம் பற்றி விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்தது.

    இது தொடர்பாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கும்போது சபை நடவடிக்கைகள் பற்றி அலுவல் ஆய்வு குழுக்கள் முடிவெடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அதானி விவகாரத்தை விசாரிக்க கோரி பாராளுமன்ற சபாநாயகரிடம் காங்கிரஸ் சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டது.

    எனவே பாராளுமன்றத்தில் அதானி விவகாரம் மிகப்பெரிய புயலை வீசச் செய்யும் என்று கருதப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு பாராளுமன்றத்துக்கு எம்.பி.க்கள் வர தொடங்கினார்கள். 10.30 மணிக்கு பிரதமர் மோடி மற்றும் மத்திய மந்திரிகள் வந்தனர்.

    பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, "பாராளுமன்றத்தை ஆக்கப்பூர்வமாக நடத்த எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு தேவை" என்று கூறினார்.

    பின்னர் பாராளுமன்றத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அலுவலகத்தில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்தினார்கள்.

    இந்த ஆலோசனையில் காங்கிரஸ், தி.மு.க., ம.தி. மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் ஈடுபட்டனர். அதானி விவகாரம், மணிப்பூர் கலவரம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக பாராளுமன்றத்தில் குரல் எழுப்புவது குறித்து அவர்கள் ஆலோசித்தனர்.

    பின்னர் சரியாக 11 மணிக்கு பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கியது.

    அவை தொடங்கியதும் சபாநாயகர் ஓம்பிர்லா இரங்கல் தீர்மானத்தை வாசித்தார். மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.

    அவை தொடங்கியதுமே எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அனைவரும் எழுந்து நின்று அதானி விவகாரம், மணிப்பூர் கலவரம் போன்ற பல்வேறு விஷயங்களை முன்வைத்து அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து சபாநாயகர் ஓம்பிர்லா அவையை பகல் 12 மணி வரை ஒத்தி வைத்தார்.

    மீண்டும் 12 மணிக்கு சபை கூடியது. அப்போது அதானி விவகாரத்தை விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து முழக்கம் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அவையை நாள் முழுவதும் சபாநாயகர் ஓம்பிர்லா ஒத்தி வைத்தார்.

    இந்த கூட்டத் தொடரில் 16 முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதில் வக்பு வாரிய திருத்த மசோதா மிக முக்கியமான தாகும்.

    தேசிய கூட்டுறவு பல்கலைக்கழகம் அமைக்க வகை செய்யும் மசோதா, வர்த்தக கப்பல் போக்குவரத்து மசோதா, கடலோர போக்குவரத்து மசோதா ஆகியவை இந்த கூட்டத் தொடரில் புதிதாக கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளன.

    8 மசோதாக்கள் ஏற்கனவே பாராளுமன்ற மேல் சபையில் நிறைவேற்றப்பட்டு நிலுவையில் உள்ளன. அந்த மசோதாக்களை மக்களவை யில் எடுத்து நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

    ஆனால் பல மசோதாக்களுக்கு காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. எனவே பாராளுமன்றத்தில் ஆளும் கட்சிக்கும், எதிர்க்கட்சிக ளுக்கும் இடையே கடும் மோதல் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அது போலவே இன்று இரு தரப்பினரும் காரசாரமாக மோதிக் கொண்டனர்.

    அடுத்த மாதம் (டிசம்பர்) 20-ந்தேதி வரை பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை நடத்த பாராளு மன்ற விவகாரத்துறை அமைச்சகம் திட்டமிட்டு உள்ளது.

    இதற்கிடையே நாளை (செவ்வாய்க்கிழமை) பழைய பாராளுமன்றத்தின் மைய மண்டலத்தில் இருசபைகளின் கூட்டு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் நாட்டின் 75-வது அரசியலமைப்பு சட்ட தினம் கொண்டாடப்பட உள்ளது.

    ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி இதில் பங்கேற்று பேச உள்ளனர். 75-வது அரசியலமைப்பு சட்ட தினத்தை முன்னிட்டு சிறப்பு தபால் தலை மற்றும் நூல்கள் வெளியிடப்பட உள்ளன.

    பாராளுமன்ற மேல் சபை அதன் தலைவர் ஜெகதீப் தன்கர் தலைமையில் இன்று காலை கூடியது. அங்கும் எதிர்க்கட்சியினர் அதானி விவகாரம், மணிப்பூர் கலவரம் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விவாதம் நடத்த அனுமதிக்குமாறு கோஷம் எழுப்பினார்கள். அவர்களை அமைதியாக இருக்கும்படி ஜெகதீப் தன்கர் கேட்டுக் கொண்டார்.

    ஆனாலும் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டபடி இருந்தனர். இதையடுத்து மேல்சபையை நாள் முழுவதும் ஜெகதீப் தன்கர் ஒத்திவைத்தார். நாளை அரசியல் சாசன தினம் கொண்டாடப்படுவதால் மேல்சபையில் விவாதங்கள் இல்லை. நாளை மறுநாள் (புதன்கிழமை) காலை 11 மணிக்கு மேல்சபை கூடும் என்று ஜெகதீப் தன்கர் அறிவித்தார்.

    Next Story
    ×