என் மலர்
இந்தியா

ஸ்டார்லிங்க்- ஏர்டெல், ஜியோ ஒப்பந்தம்: டிரம்பின் நல்லெண்ணத்தை பெற மோடியின் கூட்டாண்மை ஏற்பாடு: காங். விமர்சனம்

- தேசிய பாதுகாப்பு கோரும்போது இணைப்பை இயக்க அல்லது முடக்க யாருக்கு அதிகாரம் இருக்கும்?.
- அது ஸ்டார்லிங்காக இருக்குமா அல்லது அதன் இந்திய கூட்டாளிகளாக இருக்குமா?.
எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் மூலம் அதிவிரைவு இணைய சேவை வழங்கி வருகிறது. நகரம் மற்றும் கிராமத்தில் இருந்து வெகு தொலைவில் உள்ள குக்கிராமங்களில் கூட ஸ்டார்லிங்கால் இணைய சேவை வழங்க முடியும்.
இந்தியாவில் ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட நிறுவனங்கள் நெட்வொர்க் சேவையில் முன்னணியாக திகழ்ந்து வருகின்றன. இந்த நிலையில்தான் அதிகவேக இணைய சேவை வழங்குவதற்கு ஸ்டார்லிங்க் உடன் ஏர்டெல் மற்றும் ஜியோ ஒப்பந்தம் செய்துள்ளன. மத்திய அரசு அனுமதி கிடைத்த உடன் ஸ்டார்லிங்க் இந்தியாவில் கால்பதிக்கும்.
இந்த நிலையில் டொனால்டு டிரம்ப் நல்லெண்ணத்தை பெற பிரதமர் மோடியால் கூட்டாண்மை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என காங்கிரஸ் விமரம்சித்துள்ளது.
ஸ்டார்லிங்கின் உரிமையாளர் எலான் மஸ்க் மூலம் அமெரிக்க அதிபர் டிரம்புடன் நல்லெண்ணத்தை பெற இந்த கூட்டாண்மைகள் பிரதமர் மோடியால் திட்டமிடப்பட்டுள்ளன என்பது தெளிவாகிறது என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
மேலும், "இது தொடர்பாக பல்வேறு கேள்விகள் உள்ளன. ஒருவேளை மிக முக்கியமான ஒன்று தேசிய பாதுகாப்புடன் தொடர்புடையதாக இருக்கலாம். தேசிய பாதுகாப்பு கோரும்போது இணைப்பை இயக்க அல்லது முடக்க யாருக்கு அதிகாரம் இருக்கும்?. அது ஸ்டார்லிங்காக இருக்குமா அல்லது அதன் இந்திய கூட்டாளிகளாக இருக்குமா?. செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைப்பு வழங்கும் மற்ற நிறுவனங்களும் அனுமதிக்கப்படுமா?. அப்படி என்றால் எந்த அடிப்படையில்?" என கேள்வி எழுப்பியுள்ளார்.