என் மலர்
இந்தியா
ஜல்கான் ரெயில் விபத்தில் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு: பிரதமர் மோடி இரங்கல்
- ஜல்கான் ரெயில் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்தது.
- ரெயில் விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார்.
புதுடெல்லி:
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து புறப்பட்ட புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரெயில் மும்பை நோக்கி சென்று கொண்டிருந்தது.
மகாராஷ்டிர மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் உள்ள பட்னேரா ரெயில் நிலையம் அருகே ரெயில் நேற்று மாலை வந்தபோது, பி4 ஏசி பெட்டியின் சக்கரங்களில் இருந்து தீப்பொறி பறந்தது. உடனடியாக அங்கிருந்த பயணி ஒருவர் அபாய சங்கிலியைப் பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தியதாகக் கூறப்படுகிறது.
ரெயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக பரவிய வதந்தியால் அந்த ரெயிலில் இருந்து மற்ற பயணிகள் அவசர அவசரமாக இறங்கினர். அவர்கள் அருகே இருந்த தண்டவாளத்தில் உடமைகளுடன் நின்றிருந்த நிலையில், எதிர்திசையில் அதிவேகமாக வந்த பெங்களூரு எக்ஸ்பிரஸ் தண்டவாளத்தில் இருந்தவர்கள் மீது மோதியது. இதில் 8 பேர் சம்பவ இடத்தியே உடல் துண்டாகியும், தூக்கி வீசப்பட்டும் பலியானதாக முதல் கட்ட தகவல் வெளியானது.
இந்நிலையில், ஜல்கான் ரெயில் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.
புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரெயிலில் உள்ள 'ஹாட் ஆக்சில்' அல்லது 'பிரேக்-பைண்டிங்' (ஜாமிங்) காரணமாக தீப்பொறிகள் ஏற்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ரெயில் விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித் ஷா, ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், மகாராஷ்டிர முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மகாராஷ்டிர மாநிலம் ஜல்கானில் ரெயில் தண்டவாளத்தில் நடந்த பயங்கர விபத்தால் வேதனை அடைந்தேன். பலியானோரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அதிகாரிகள் செய்து வருகின்றனர் என தெரிவித்தார்.
இதனிடையே உயிரிழந்தவர்களுக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்குவதாக மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்துள்ளார்.