என் மலர்
இந்தியா
காங்கிரசுக்கு நோ என்ட்ரி சொன்ன மக்கள்: தொண்டர்களிடம் உற்சாக உரையாற்றிய பிரதமர் மோடி
- அரியானாவில் பா.ஜ.க. 48 தொகுதிகளில் வென்று 3-வது முறையாக ஆட்சி அமைக்கிறது.
- ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற தேர்தலில் பாஜக 29 இடங்களில் வெற்றி பெற்றது.
புதுடெல்லி:
அரியானாவில் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. 48 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் 3-வது முறையாக ஆட்சி அமைக்கிறது. இதனால் பா.ஜ.க.வுக்கு பல்வேறு மாநில முதல் மந்திரிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற தேர்தலில் பாஜக 29 இடங்களில் வெற்றி பெற்றது. அங்கு கணிசமாக வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளது.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் பிரதமர் மோடி, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்துக்கு வந்த பிரதமர் மோடி கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் பலத்த கரகோஷத்துடன் வரவேற்பு அளித்தனர்.
கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
பா.ஜ.க. எங்கு ஆட்சி அமைத்தாலும் அங்குள்ள மக்கள் நீண்ட காலமாக பா.ஜ.க.வை ஆதரிக்கின்றனர்.
மறுபுறம், காங்கிரசின் நிலை என்ன? கடைசியாக எப்போது காங்கிரஸ் அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தது?
சுமார் 13 ஆண்டுக்கு முன் 2011-ல் அசாமில் அவர்களின் அரசாங்கம் மீண்டும் அமைந்தது. அதன்பின் அவர்களின் அரசாங்கம் மீண்டும் அமைக்கப்படவில்லை.
நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் மக்கள் காங்கிரசுக்கு நோ என்ட்ரி போர்டு வைத்துள்ளனர்.
இந்திய சமுதாயத்தை பலவீனப்படுத்தி, இந்தியாவில் அராஜகத்தைப் பரப்புவதன் மூலம் நாட்டை பலவீனப்படுத்த காங்கிரஸ் விரும்புகிறது.
அதனால்தான் அவர்கள் பல்வேறு பிரிவினரைத் தூண்டிவிடுகிறார்கள். தொடர்ந்து தீ மூட்ட முயற்சித்து வருகின்றனர்.
விவசாயிகளைத் தூண்டி விடுவதற்கான முயற்சிகள் எப்படி நடந்தன என்பதை நாடு பார்த்தது.
ஆனால் அரியானா விவசாயிகள் நாட்டோடு இருக்கிறோம், பா.ஜ.க.வுடன் இருக்கிறோம் என்று தகுந்த பதிலை கொடுத்தனர்.
தலித்துகள் மற்றும் ஓபிசியினரை தூண்டிவிட பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இந்த சமூகமும் இந்த சதியை அங்கீகரித்து தாங்கள் நாட்டோடு இருக்கிறோம், பா.ஜ.க.வுடன் இருக்கிறோமென கூறியது என தெரிவித்தார்.