search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    புனே இளம்பெண் பாலியல் வன்கொடுமை: குற்றவாளியை கைது செய்த போலீசார்
    X

    புனே இளம்பெண் பாலியல் வன்கொடுமை: குற்றவாளியை கைது செய்த போலீசார்

    • சொந்த ஊரான சத்தாரா மாவட்டம் பால்டான் செல்ல பஸ்சுக்காக இளம்பெண் காத்திருந்தார்.
    • தனியாக நின்ற இளம்பெண்ணை நோட்டமிட்ட ஆசாமி ஒருவன் அவரிடம் நெருங்கி வந்தான்.

    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலம் புனே ஸ்வர்கேட்டில் உள்ள பஸ்நிலையத்துக்கு அதிகாலை வேளையில் 26 வயது இளம்பெண் ஒருவர் வந்தார். அவர் தனது சொந்த ஊரான சத்தாரா மாவட்டம் பால்டானுக்குச் செல்ல பஸ்சுக்காக நடைமேடை ஒன்றில் காத்திருந்தார்.

    தனியாக நின்ற இளம்பெண்ணை நோட்டமிட்ட ஆசாமி ஒருவன் அவரிடம் நெருங்கிவந்தான். அந்த ஆசாமி, இளம்பெண்ணிடம் பார்த்து நைசாக பேச்சு கொடுத்தான். நீங்கள் செல்ல வேண்டிய ஊருக்கு பஸ் இங்கு வராது என் கூறிய அவன், பஸ் நிற்கும் பகுதிக்கு அழைத்துச் செல்வதாக கூறி இளம்பெண்ணை அழைத்துச் சென்றான்.

    பஸ் நிலையத்தின் ஒரு பகுதியில் நின்ற மாநில அரசு போக்குவரத்து கழகத்துக்குச் சொந்தமான சிவ்சாகி என்ற சொகுசு பஸ்சை காட்டி, இதுதான் நீங்கள் போகவேண்டிய ஊருக்குச் செல்லும் பஸ் என கூறியுள்ளான். அந்த பஸ்சில் இளம்பெண் ஏறியபோது, விளக்கு எல்லாம் அணைந்து கிடந்தது. டிரைவர், நடத்துனர் வந்த உடன் பஸ் கிளம்பி விடும் என்றான். இளம்பெண், பஸ்சுக்குள்ஏறிச் சென்றார். அந்த ஆசாமியும் பின்தொடர்ந்து பஸ்சில் ஏறினான். திடீரென பஸ்சின் கதவைப் பூட்டினான். அது ஏ.சி. பஸ் என்பதால் ஜன்னல் கண்ணாடி அனைத்தும் அடைத்து வைக்கப்பட்டு இருந்தன. அந்த ஆசாமி பெண்ணை பஸ்சுக்குள் பலாத்காரம் செய்துவிட்டு ஓடிவிட்டான்.

    இந்தக் கொடூர சம்பவம் குறித்து தோழிக்கு போன் செய்து நடந்த சம்பவத்தைச் கூறி கதறி அழுதார். இதுதொடர்பாக அவர் போலீசிலும் புகார் அளித்தார்.

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பஸ் நிலைய கண்காணிப்பு கேமரா காட்சியை ஆய்வு செய்தபோது, பலாத்கார ஆசாமியின் அடையாளம் தெரியவந்தது. அவன் புனே மாவட்டம் சிக்ராப்பூரை சேர்ந்த தத்தாத்ரேய காடே (36), என தெரிய வந்தது. அவனை தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

    இதற்கிடையே, குற்றவாளி குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும். தகவல் அளிப்பவரின் பெயர் ரகசியமாக வைக்கப்படும் என புனே காவல் ஆணையர் அமிதேஷ் குமார் தெரிவித்தார்.

    இந்நிலையில், இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த தத்தாத்ரேய காடே புனேவின் ஷிரூரில் கைது செய்யப்பட்டார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×