என் மலர்
இந்தியா
2023ல் வெற்றி பெறுவதற்கே முன்னுரிமை... சோனியாவை சந்தித்தபின் சச்சின் பைலட் பேட்டி
- கெலாட் ராஜஸ்தான் முதல்வராக நீடிப்பது தொடர்பாக சோனியா காந்தியே முடிவு செய்வார்
- ராஜஸ்தானில் பாஜக மற்றும் காங்கிரஸ் ஆட்சி மாறி மாறி வருவதாக அடிக்கடி விவாதிக்கப்படுகிறது.
புதுடெல்லி:
ராஜஸ்தான் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் அதிகாரப் போட்டி தலைதூக்கிய நிலையில், முதல்வர் அசோக் கெலாட், காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடப்போவதில்லை என அறிவித்தார். டெல்லியில் இன்று சோனியா காந்தியை சந்தித்து பேசிய பின் இந்த அறிவிப்பை வெளியிட்டார். கட்சியில் ஏற்பட்ட நெருக்கடிக்கு தார்மீக பொறுப்பேற்று இந்த முடிவை எடுத்திருப்பதாக அவர் கூறினார். மேலும், ராஜஸ்தான் முதல்வராக நீடிப்பதா, வேண்டாமா? என்பது தொடர்பாக சோனியா காந்தியே முடிவு செய்வார் என்றும் கூறினார்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், அசோக் கெலாட்டின் போட்டியாளரான சச்சின் பைலட் இன்று டெல்லியில் சோனியா காந்தியை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பைலட், 2023 தேர்தல் வெற்றிக்கே முன்னுரிமை அளிப்பதாக கூறினார்.
'ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை பாஜக மற்றும் காங்கிரஸ் ஆட்சி மாறி மாறி வருவதாக அடிக்கடி விவாதிக்கப்படுகிறது. 2023ல் ராஜஸ்தானில் இரண்டாவது முறையாக காங்கிரஸ் ஆட்சிக்கு வர முடியாது என்பதற்கு எந்த காரணமும் இருப்பதாக தெரியவில்லை. வெற்றியை நோக்கி நாங்கள் செயல்படுவோம், என்றார் சச்சின் பைலட்.