search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அதானி விவகாரம் குறித்து விவாதிக்காமல் தப்பியோடும் பிரதமர் மோடி: பிரியங்கா தாக்கு
    X

    அதானி விவகாரம் குறித்து விவாதிக்காமல் தப்பியோடும் பிரதமர் மோடி: பிரியங்கா தாக்கு

    • அதானிக்கு எதிராக அமெரிக்க கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
    • தொழிலதிபர் அதானியை கைது செய்யவேண்டும் என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.

    புதுடெல்லி:

    அதானியின் சூரிய மின்சக்தி நிறுவனம் தயாரிக்கும் மின்சாரத்தை வினியோகிப்பதற்கான ஒப்பந்தத்தை பெறுவதற்காக ஆந்திரா, ஒடிசா, தமிழ்நாடு, காஷ்மீர், சத்தீஸ்கர் மாநிலங்களில் அரசு அதிகாரிகளுக்கு ரூ.2,000 கோடிக்கு மேல் லஞ்சம் கொடுத்துள்ளார் என அமெரிக்கா குற்றம்சாட்டியது.

    இதை மறைத்து அமெரிக்கர்களிடம் இருந்து அதிகளவிலான முதலீடுகளைப் பெற்றுள்ளதாகவும், இது அமெரிக்க சட்டத்துக்கு எதிரானது என அமெரிக்காவின் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் (எஸ்.இ.சி.) சார்பில் நியூயார்க் பெடரல் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    இதையடுத்து, அதானியின் மருமகனும், அதானி கிரீன் எனர்ஜி நிறுவன செயல் இயக்குனருமான சாகர் அதானி உள்பட 7 பேர் மீது லஞ்சம் மற்றும் கடன் பத்திர மோசடி தொடர்பாக தனித்தனியாக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கில் அதானிக்கு எதிராக அமெரிக்க கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

    தங்கள் மீதான குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை. அமெரிக்காவின் இந்தக் குற்றச்சாட்டுகளை சட்டப்படி எதிர்கொள்வோம் என அதானி குழுமம் தெரிவித்துள்ளது.

    இந்த விவகாரம் இந்திய அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. தொழிலதிபர் அதானியை கைதுசெய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.

    அதானி மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பாராளுமன்ற வளாகத்தில் 3-வது நாளாக இந்தியா கூட்டணி கட்சியினர் நேற்றும் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் ராகுல் காந்தி, வயநாடு எம்.பி. பிரியங்கா காந்தி உள்பட பலர் கலந்து கொண்டார்.

    இந்நிலையில், அதானி விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்காமல் பிரதமர் மோடி ஓடிவிடுகிறார் என பிரியங்கா காந்தி தெரிவித்தார்.

    இதுதொடர்பாக பிரியங்கா வெளியிட்டுள்ள செய்தியில், அதானி மெகா ஊழல் குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என நாட்டு மக்கள் விரும்புகிறார்கள். இந்தியா கூட்டணியின் அனைத்துக் கட்சிகளும் பாராளுமன்றத்தில் விவாதிக்கக் கோருகின்றன. ஆனால் பிரதமர் மோடியும், மத்திய அரசும் தொடர்ந்து விவாதத்தில் இருந்து தப்பி ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அனைத்து விதிமுறைகளையும் மீறி அதானியின் ஊழலை பிரதமர் பாதுகாக்கும் விதம் மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. சக எம்.பி.க்களுடன் சேர்ந்து இந்தப் பிரச்சனையை பாராளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் செய்தேன் என தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×