search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஆம் ஆத்மி வெளியிட்ட போஸ்டர்: நேர்மையற்ற மனிதர்கள் வரிசையில் ராகுல் காந்தி படம்
    X

    ஆம் ஆத்மி வெளியிட்ட போஸ்டர்: நேர்மையற்ற மனிதர்கள் வரிசையில் ராகுல் காந்தி படம்

    • நேர்மையற்ற மனிதர்களை விட கெஜ்ரிவாலின் நேர்மை உயர்வை பரதிபலிக்கும் வகையில் ஆம் ஆத்மி போஸ்டர்.
    • பிரதமர் மோடி, அமித் ஷா படங்களுடன் ராகுல் காந்தியின் படமும் நேர்மையற்ற மனிதர்கள் வரிசையில் இடம் பிடிப்பு.

    டெல்லி சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந்தேதி நடைபெறுகிறது. ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. என்றாலும் ஆம் ஆத்மி- பாஜக இடையே கடும் போட்டியுள்ளது.

    தேர்தல் நெருங்குவதால் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலை பாஜக தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். அதேவேளையில் பிரதமர் மோடி, அமித் ஷா, மத்திய அரசை ஆம் ஆத்மி கட்சியினர் தாக்கி பேசி வருகிறார்கள்.

    காங்கிரஸ் தலைவர்களை ஆம் ஆத்மி இதுவரை மிகப்பெரிய அளவில் தாக்கியது கிடையாது. நேற்று முன்தினம் ராகுல் காந்தி, "மோசமான கட்டுமானம், பணவீக்கம், வேலையின்மை, மாசு, ஊழல் கொண்ட டெல்லியாக உள்ளது. டெல்லி ஷீலா தீட்ஷித்தின் அதே உண்மையான வளர்ச்சி மாடலை தற்போது விரும்புகிறது. பிரதமர் மோடி மற்றும் கெஜ்ரிவாலின் பொய் பிரசாரம் மற்றும் பி.ஆர். மாடலை விரும்பவில்லை" எனத் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் ஆம் ஆத்மி நேர்மையற்ற மனிதர்களைவிட கெஜ்ரிவாலின் நேர்மை உயர்வு என்பதை சுட்டிக்காட்டு ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளது. அதில் நேர்மையற்ற மனிதர்கள் வரிசையில் பிரதமர் மோடி, அமித் ஷா, யோகி ஆதித்யநாத், டெல்லி பாஜக தலைவர்கள் படம் இடம் பிடித்துள்ளது. அத்துடன் ராகுல் காந்தி படமும் இடம் பிடித்துள்ளது.

    இதன்மூலம் ராகுல் காந்தியை ஆம் ஆத்மி நேரடியாக தாக்க தொடங்கியுள்ளது. பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் இடம் பிடித்திருந்தது. டெல்லியில் கூட்டணி அமைத்து தொகுதி பங்கீடு செய்து போட்டியிட்டது. ஆனால் சட்டசபை தேர்தலில் தற்போது தனித்தனியாக போட்டியிடுகின்றன.

    தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக காங்கிரஸ் தலைவர் அஜய் மக்கான் அரவிந்த் கெஜ்ரிவாலை தேசத்துரோகி என கடுமையாக விமர்சித்திருந்தார். அஜன் மக்கான் மீது காங்கிரஸ் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், இந்தியா கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சியை வெளியேற்ற மற்ற கட்சிகளிடம் வலியுறுத்துவோம் என ஆம் ஆத்மி தெரிவித்திருந்தது.

    இதற்கு பாஜக எம்.பி. அனுராக் தாகூர் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில் "என்னுடைய ஒரே கேள்வி, டெல்லி முதல்வர் அதிஷி நேர்மையற்றவரா? போஸ்டரில் அவருடைய படம் ஏன் இடம் பெறவில்லை?. கெஜ்ரிவால் பெண்களுக்கு எதிரானவர். அவர் தன்னை மட்டுமே பார்க்கிறார். இருப்பினும், மக்கள் அவரைப் பார்த்து சிரிக்கிறார்கள். டெல்லியில் மிகப்பெரிய நேர்மையற்ற நபர் அவர்தான். அவர் தன்னை டெல்லியின் ஷெஹென்ஷா என்று நினைத்துக்கொள்கிறார்" என்றார்.

    Next Story
    ×