search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தமிழகத்தில் 5,300 ஆண்டுகளுக்கு முன்னதாகவே இரும்பு தொழில்நுட்பம்: ராகுல் காந்தி பெருமிதம்
    X

    தமிழகத்தில் 5,300 ஆண்டுகளுக்கு முன்னதாகவே இரும்பு தொழில்நுட்பம்: ராகுல் காந்தி பெருமிதம்

    • இந்தியாவின் வளமான பாரம்பரியம் உலகிற்கு தொடர்ந்து உத்வேகம் அளிக்கிறது.
    • தமிழகத்தில் 5300 ஆண்டுகளுக்கு முன்பு இரும்பின் பயன்பாட்டை உறுதி செய்த கண்டுபிடிப்பு இரும்பு யுகத்தில் இந்தியாவின் ஆரம்பகால முன்னேற்றங்களை காட்டுகிறது.

    5,300 ஆண்டுகளுக்கு முன்னாடியே உருக்கு இரும்பு தொழில்நுட்பம் தமிழ் நிலத்தில் அறிமுகம் ஆகிவிட்டது. இப்போது தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் மூலம், அண்மையில் கிடைக்கப்பெற்ற காலக் கணக்கீடுகள், இரும்பு அறிமுகம் ஆன காலத்தை கி.மு.4000 ஆண்டின் முதற்பகுதிக்கு கொண்டு சென்றிருக்கிறது.

    தென் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் 5,300 ஆண்டுகளுக்கு முன்னால் இரும்பு அறிமுகம் ஆகி இருக்கும் என்று உறுதியாக சொல்லலாம். இதை ஆய்வின் முடிவுகளாகவே நான் அறிவிக்கிறேன் என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அறிவித்திருந்தார்.

    இந்த நிலையில் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பக்க பதிவில் கூறியிருப்பதாவது:-

    இந்தியாவின் வளமான பாரம்பரியம் உலகிற்கு தொடர்ந்து உத்வேகம் அளிக்கிறது. தமிழகத்தில் 5300 ஆண்டுகளுக்கு முன்பு இரும்பின் பயன்பாட்டை உறுதி செய்த சமீபத்திய தொல்பொருள் கண்டுபிடிப்புகள் இரும்பு யுகத்தில் இந்தியாவின் ஆரம்பகால முன்னேற்றங்களை காட்டுகிறது. தமிழ்நாட்டின் பங்களிப்புகள், நம் நாடு எண்ணற்ற மைல் கற்களுடன் இந்தியாவின் புதுமை, ஒற்றுமையை பிரதிபலிக்கின்றன. ஒவ்வொரு மாநிலத்திலும், சமூகத்திலும், குரலிலும் செழித்து வளரும் இந்தியாவின் உத்வேகத்தை கொண்டாடுவோம்.

    இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    முன்னதாக,

    இந்தியத் துணை கண்ட வரலாற்றின் கண்ணோட்டத்தை மாற்றி அமைக்கும் 'இரும்பின் தொன்மை' எனும் நூலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழாவில் வெளியிட்டார். அதை அமைச்சர் தங்கம் தென்னரசு பெற்றுக் கொண்டார். விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

    தமிழர்களுடைய தொன்மையை உலகத்துக்கு சொல்கிற ஒரு மாபெரும் ஆய்வுப் பிரகடனத்தை இப்போது நான் அறிவிக்கிறேன். தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் இரும்பின் காலம் தொடங்கி இருக்கிறது. இந்திய நாட்டுக்கு மட்டுமல்ல, உலகுக்கே மறுபடியும் சொல்கிறேன்.

    தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் இரும்பின் காலம் தொடங்கியது என்ற மாபெரும் மானுடவியல் ஆய்வு பிரகடனத்தை இந்த நிகழ்ச்சியின் வாயிலாக அறிவிக்கிறேன்.

    5,300 ஆண்டுகளுக்கு முன்னாடியே உருக்கு இரும்பு தொழில்நுட்பம் தமிழ் நிலத்தில் அறிமுகம் ஆகிவிட்டது. இப்போது தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் மூலம், அண்மையில் கிடைக்கப்பெற்ற காலக் கணக்கீடுகள், இரும்பு அறிமுகம் ஆன காலத்தை கி.மு.4000 ஆண்டின் முதற்பகுதிக்கு கொண்டு சென்றிருக்கிறது.

    தென் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் 5,300 ஆண்டுகளுக்கு முன்னால் இரும்பு அறிமுகம் ஆகி இருக்கும் என்று உறுதியாக சொல்லலாம். இதை ஆய்வின் முடிவுகளாகவே நான் அறிவிக்கிறேன்.

    தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் சேகரிக்கப்பட்ட மாதிரிகள் உலகத்தோட தலைசிறந்த ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. புனே நகரில் உள்ள பீர்பால்சகானி தொல் அறிவியல் நிறுவனம், அகமதாபாத் நகரில் உள்ள இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம் ஆகிய தேசிய அளவில் புகழ்பெற்ற ஆய்வு நிறுவனங்களுக்கும், பன்னாட்டு அளவில் உயரிய நிறுவனமான அமெரிக்க நாட்டின் புளோரிடா மாநிலத்தில் உள்ள பீட்டா ஆய்வகத்துக்கும் மாதிரிகள் பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    தேசிய நிறுனங்களில் ஓ.எஸ்.எல். பகுப்பாய்வுக்கும், பீட்டா ஆய்வகத்தில் கதிரியக்க கால பகுப்பாய்வுக்கும் ஒரே தாழியில் இருந்து மாதிரிகளை அனுப்பி வைத்தோம். இப்படியான 3 நிறுவனங்களில் இருந்தும் ஒரே மாதிரியான பகுப்பாய்வு முடிவுகள் பெறப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, பல்வேறு ஆய்வு நிறுவனங்களுக்கு மாதிரிகளை அனுப்பி, தரப்பட்ட முடிவுகளை கூர்ந்து, பகுப்பாய்வு செய்ததில் ஒரே மாதிரியான முடிவுகள் கிடைக்கிறது.

    இப்போது கிடைத்துள்ள கதிரியக்க காலக் கணக்கீடுகள் மற்றும் ஓ.எஸ்.எல். பகுப்பாய்வு அடிப்படையில் கி.மு.3,345-ல் தென்னிந்தியாவில் இரும்பு அறிமுகம் ஆகிவிட்டது என்பது தெரிய வருகிறது. (அதற்கான ஆய்வு முடிவுகள் காண்பித்தார்).

    இந்த பகுப்பாய்வு முடிவுகள், வெளிநாடுகள் மற்றும் இந்தியாவில் இருக்கும் தொல்லியல் அறிஞர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர்கள் எல்லோரும் இரும்பின் தோற்றத்தையும் பண்டைய தொழில் நுட்பத்தைப் பற்றியும் ஆய்வு செய்துவரும் அறிஞர்கள். அந்த அறிஞர்கள் எல்லோரும் இந்த அவையில் கூடியிருக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் ஒருசேர தமிழ்நாடு அரசையும், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் ஆய்வு முன்னெடுப்புகளையும் வெகுவாக பாராட்டியிருக்கிறார்கள்.

    இவை எல்லாவற்றையும் தொகுத்துதான் 'இரும்பின் தொன்மை' என்ற நூல் வெளியிடப்பட்டிருக்கிறது.

    அகழாய்வு செய்யப்பட்ட இடங்களில் இருக்கும் இரும்புப் பொருட்களின் உலோகவியல் பகுப்பாய்வும், இரும்புத்தாது இருக்கும் தொல்லியல் தளங்களில் எதிர்காலத்தில் மேற்கொள்ளவுள்ள அகழாய்வுகளும் இந்தக் கண்டுபிடிப்புகளுக்கு மேலும் வலுசேர்க்கும்.

    இருந்தாலும், அண்மைக்கால அகழாய்வு முடிவுகள் வாயிலாக தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்திய அளவில் மட்டுமல்ல, உலகளவில் இரும்புத் தாதுவிலிருந்து, இரும்பை பிரித்து எடுக்கும் தொழில் நுட்பம் தமிழ் நிலப்பரப்பில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது என்று பெருமிதத்தோடு கூறுவோம்.

    அதாவது, 5300 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் நிலப்பரப்பில் இரும்பு அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பதை அறிவியல் அடிப்படையில் நிறுவியிருக்கிறோம் என்று மட்டற்ற மகிழ்ச்சியுடன் உலகுக்கு நான் அறிவிக்கிறேன். இது தமிழுக்கும், தமிழினத்துக்கும், தமிழ்நாட்டுக்கும், தமிழ் நிலத்துக்கும் பெருமை!

    இந்தியாவின் வரலாறு இனி தமிழ் நிலத்தில் இருந்துதான் எழுதப்பட வேண்டும் என்று நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டு வருகிறேன். அதை மெய்ப்பிக்கும் ஆய்வுகளை தமிழ்நாடு தொல்லியல் துறை தொடர்ச்சியாக செய்து வருகிறது. இந்த ஆய்வுகள், பல்வேறு திருப்புமுனைகளையும் உருவாக்கி வருகிறது.

    இதற்கு முன்பு, தமிழ்நாட்டில் இரும்பின் அறிமுகம் 4 ஆயிரத்து 200 ஆண்டுகளுக்கு முன்பே இருந்ததை கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறை அகழாய்வு மூலம் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நான் உலகுக்கு அறிவித்திருக்கிறேன்.

    இத்தகைய அகழாய்வு முடிவுகள் தமிழ்நாட்டு வரலாற்றுக்கு மட்டுமல்லாமல் இந்தியத் துணைக்கண்ட வரலாற்றுக்கே முக்கிய திருப்புமுனையாக திகழ்ந்து வருகிறது.

    இந்தப் பெருமையை நம்முடைய குழந்தைகளிடம் நாம் எடுத்துச் சொல்ல வேண்டும். இப்படிப்பட்ட பெருமைமிக்க தமிழ்ச் சமூகம், உலகுக்கே வழிகாட்டும் அறிவார்ந்த சமூகமாக வளரவேண்டும் என்று எதிர்காலத்துக்கான திசையை காட்டவேண்டும்! பழம்பெருமையை பேசுவது என்பது புது சாதனைகள் படைக்க ஊக்கமாக அமைய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, ராஜேந்திரன் சக்கரபாணி, தலைமை செயலாளர் முருகானந்தம், முதன்மை செயலாளர்கள் உதயசந்திரன், சந்திரமோகன், கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக பேராசிரியர் திலீப் குமார் சக்ரவர்த்தி, இந்திய தொல்லியல் துறை முன்னாள் தலைமை இயக்குனர் ராகேஷ் திவாரி, தொல்லியல் துறை கல்வியல் ஆய்வு ஆலோசகர் ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×