என் மலர்
இந்தியா
ராகுல் காந்தியின் பொய்கள் வெளிநாட்டில் நமது மரியாதையைக் குலைக்கும்- ஜெய்சங்கர்
- ராகுல் காந்தி தவறான தகவலை பரப்புகிறார் என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் விமர்சித்துள்ளார்.
- வெளியுறவு விவகாரம், ராணுவ விவகாரங்கள் குறித்து இப்படி பேசக் கூடாது என்றார்.
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31-ந் தேதி தொடங்கியது. நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஜனாதிபதி திரவுபதி முர்மு அன்று கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார்.
அதை தொடர்ந்து ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்காக பாராளுமன்றம் இன்று கூடியது.
மக்களவையில் குடியரசுத் தலைவர் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசினார்.
அப்போது அவர், "இந்தியாவும் உற்பத்தியில் தொழில்நுட்பத்தில் முன்னேறி இருந்தால், அமெரிக்க அதிபரின் பதவியேற்பு விழாவிற்கு நமது பிரதமரை அழைக்க வேண்டும் என்பதற்காக நாம் நமது வெளியுறவு அமைச்சரை அனுப்ப மாட்டோம். மாறாக அமெரிக்க அதிபர் இங்கு வந்து நமது பிரதமரை அழைத்திருப்பார்" என்று தெரிவித்தார்.
ராகுல் காந்தியின் இந்த பேச்சுக்கு பாஜக எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனிடையே "வெளியுறவு விவகாரம், ராணுவ விவகாரங்கள் குறித்து இப்படி பேசக் கூடாது" என அமைச்சர் கிரண் ரிஜிஜு பதில் அளித்தார்.
தொடர்ந்து, ராகுல் காந்தி குற்றச்சாட்டை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மறுத்துள்ளார்.
இது தொடர்பாக ஜெய்சங்கர் கூறியதாவது:-
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி என் மீது வேண்டுமென்றே தவறான தகவலை பரப்பி உள்ளார். இந்த தவறான தகவல்கள், நம் நாட்டின் சர்வதேச மரியாதைக்கு பங்கம் விளைவிக்கும் என எச்சரிக்கிறேன்.
நான், அப்போது அமெரிக்காவின் வெளியுறவு மந்திரி மற்றும் பைடன் நிர்வாகத்தின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோரைச் சந்திக்க சென்றிருந்தேன்.
மேலும், அங்கு நடந்த இந்திய தூதரகங்களின் தலைமை அதிகாரிகளின் கூட்டத்திற்கு தலைமை தாங்கினேன். நான் தங்கியிருந்த காலத்தில், புதிதாக நியமிக்கப்பட்ட தேசிய பாதுகாப்பு ஆலோசகர் என்னைச் சந்தித்தார். எந்த கட்டத்திலும் பிரதமருக்கான அழைப்பிதழ் பற்றி பேசப்படவில்லை.
நமது பிரதமர் இத்தகைய நிகழ்வுகளில் கலந்து கொள்வதில்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இத்தகைய நிகழ்வுகளில் இந்தியா சார்பில் சிறப்பு தூதர்கள் மட்டுமே கலந்து கொள்வது வழக்கம்.
ராகுல் காந்தியின் இந்த பொய்கள் அரசியல் நோக்கத்திற்காக இருக்கலாம். ஆனால் அவை வெளிநாட்டில் நமது மரியாதையைக் குலைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.