என் மலர்
இந்தியா

ரம்ஜான்: முஸ்லிம் ஊழியர்கள் மாலை 4 மணிக்கு வீடு செல்லலாம் - தெலுங்கானா வழியில் 'ஆந்திரா' அறிவிப்பு

- மார்ச் 1 அல்லது 2-ம் தேதி பிறையைப் பொறுத்து ரம்ஜான் மாதம் தொடங்க உள்ளது.
- தெலுங்கானா காங்கிரஸ் அரசு உத்தரவுக்கு பாஜக கண்டனம் தெரிவித்தது.
ஆந்திரப் பிரதேசத்தில் பாஜகவின் என்டிஏ கூட்டணியில் இடம்பெற்ற தெலுங்கு தேச தலைவர் சந்திரபாபு நாயுடுவின் ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ரம்ஜான் நோன்புக் காலம் தொடங்க உள்ள நிலையில், முஸ்லிம்களுக்குப் பணி நேரத்தைக் குறைத்து ஆந்திர அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மார்ச் 1 அல்லது 2-ம் தேதி பிறையைப் பொறுத்து ரம்ஜான் மாதம் தொடங்க உள்ளது.
எனவே மார்ச் 2 முதல் மார்ச் 31 வரை புனித ரம்ஜான் மாதத்தில் தேவையான பிரார்த்தனைகளைச் செய்ய, மாநிலத்தில் பணிபுரியும் அனைத்து அரசு முஸ்லிம் ஊழியர்கள், ஆசிரியர்கள், ஒப்பந்த, அவுட்-சோர்சிங், வாரியங்கள், நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை ஊழியர்கள் 1 மணி நேரம் முன்னதாக மாலை 4.00 மணிக்கு தங்கள் அலுவலகங்கள், பள்ளிகளை விட்டு வெளியேறி வீடு திரும்பலாம் என்று ஆந்திர அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இருப்பினும் அவசரநிலை ஏற்பட்டால் ஊழியர்கள் தங்கியிருக்க வேண்டியிருக்கும் என்றும் அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான தெலுங்கானா மாநில காங்கிரஸ் அரசு இதே உத்தரவை பிறப்பித்திருந்த நிலையில் தற்போது அதைப் பின்பற்றி ஆந்திரப் பிரதேச அரசும் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. தெலுங்கானா காங்கிரஸ் அரசு உத்தரவுக்கு அம்மாநில பாஜக கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.