என் மலர்
இந்தியா
இசை நிகழ்ச்சிக்கு இடையே மவுன அஞ்சலி
- ரத்தன் டாடா இறந்த செய்தி நாடு முழுவதும் காட்டுத்தீபோல பரவியது.
- தேசத்தின் அடையாளமான ரத்தன் டாடாவின் மறைவுக்கு அவர்கள் அஞ்சலி செலுத்திய வீடியோ காட்சி இணையத்தில் பரவி வருகிறது.
டாடா குழுமத்தின் முன்னாள் தலைவரும் பிரபல தொழில் அதிபருமானவர் ரத்தன் டாடா உடல் நலக்குறைப்பாடு காரணமாக நேற்று முன்தினம் இரவு மரணம் அடைந்தார். ரத்தன் டாடாவின் மறைவுக்கு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
இந்தநிலையில் இசை நிகழ்ச்சி நடுவே ரத்தன் டாடாவின் மறைவுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. நவராத்திரி பண்டிகையையொட்டி மும்பையில் உள்ள நெஸ்கோ திறந்தவெளி மைதானத்தில் இசை நிகழ்ச்சி இரவு நடத்தப்பட்டது. குழந்தைகள், பெண்கள் என ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து இசை நிகழ்ச்சியை கண்டுகளித்து கொண்டிருந்தனர். அப்போது ரத்தன் டாடா இறந்த செய்தி நாடு முழுவதும் காட்டுத்தீபோல பரவியது.
டாடாவின் மறைவை அறிந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்த முடிவு செய்து இசை நிகழ்வை பாதியிலேயே நிறுத்தினர். பின்னர் அவருடைய படத்தை திரையிட்டு டாடாவின் மரண செய்தியை அறிவித்தபோது பொதுமக்களும் தங்கள் கொண்டாட்டாங்களை உடனடியாக நிறுத்தியபடி மவுனமாக இருந்து அஞ்சலி செலுத்தினர். மேலும் செல்போன் விளக்குகளை ஒளிரவிட்டும் இறுதி மரியாதை செலுத்தினர். தேசத்தின் அடையாளமான ரத்தன் டாடாவின் மறைவுக்கு அவர்கள் அஞ்சலி செலுத்திய வீடியோ காட்சி இணையத்தில் பரவி வருகிறது.