என் மலர்
இந்தியா
பா.ஜனதாவின் "400 முழக்கம்" எதார்த்தத்தின் நேர் எதிர்: எடுத்துக்காட்டுடன் காங்கிரஸ் கிண்டல்
- இந்திய அரசியல் வரலாற்றில் ஒருமுறைதான் 400 இடங்களுக்கு அதிகமான இடங்களில் வெற்றி.
- இலக்கை நிர்ணயித்து முழக்கம் வெளியிடுவது எளிது- ஜெய்ராம் ரமேஷ்.
மக்களவை தேர்தலில் 400 தொகுதிகள் இலக்கு என்ற முழக்கத்துடன் பா.ஜனதா தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. அதேவேளையில் இந்தியா கூட்டணி பா.ஜனதாவை தோற்கடிக்கும் வகையில் களம் இறங்கியுள்ளது. காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை வெளியிட்டு பிரசாரத்தில் குதித்துள்ளது. பா.ஜனதா கட்சி தலைவர்களும் விமர்சனங்களுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறது.
பா.ஜனதா கூட்டணியாக 400 தொகுதிகளை கைப்பற்றுவோம், தனியாக 370 தொகுதிகளை பிடிப்போம் எனத் தெரிவித்து வரும் நிலையில், 200 தொகுதிகளை தாண்டுவீர்களா? என காங்கிரஸ் கேள்வி எழுப்பி வருகிறது.
இந்த நிலையில் பா.ஜனதாவின் 400 முழக்கம் எதார்த்தத்தின் நேர் எதிர் என காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் எடுத்துக்காட்டுடன் கிண்டல் செய்துள்ளார்.
இது தொடர்பாக ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:-
பா.ஜனதா 543 தொகுதிகளில் கூட்டணியாக 400 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் எனத் தெரிவித்து வருகிறது. ஆனால் இந்திய அரசியல் வரலாற்றில் ஒருமுறைதான் 400 இடங்களுக்கு அதிகமான இடங்களில் ராஜிவ் காந்தி தலைமையில் 1984-ல் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.
இலக்கை நிர்ணயித்து முழக்கம் வெளியிடுவது எளிது. 2017 குஜராத் தேர்தலின்போது பா.ஜனதா 150 இடங்களை வெல்வோம் என முழக்கமிட்டது. ஆனால் 99 இடங்களில்தான் வெற்றி பெற்றது. 2018-ல் சத்தீஸ்கர் தேர்தலின்போது 50 இடங்களை வெல்வோம் என முழக்கமிட்டது. ஆனால் 15 இடங்களில்தான் வெற்றி பெற்றது. 2019 ஜார்கண்ட் தேர்தலின்போது 65 இடங்களை கைப்பற்றுவோம் என முழக்கமிட்டது. ஆனால் 25 இடங்களில்தான் வெற்றி பெற்றது.
2020 டெல்லி மாநில தேர்தலில் 45 இடங்களை வெல்வோம் என முழக்கப்பட்டது. ஆனால் 8 இடங்களில்தான் வெற்றி பெற்றது. 2021 தமிழ்நாடு தேர்தலில் 118 இடங்களை வெல்வோம் என முழக்கமிட்டது. ஆனால் 4 இடங்களில்தான் வெற்றி பெற்றது. இலக்கு, வெல்வோம் என முழக்கமிடுவது எளிது. ஆனால் எதார்த்தம் நேர் எதிராக உள்ளது.
இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
2024 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும், தனியாக பா.ஜனதா 370 இடங்களில் வெற்றி பெறும் என பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா கூறி வருகிறது.
2019 தேர்தலின்பேது 300-க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறுவோம் எனத் தெரிவித்தது. தற்போது அதை 400 ஆக உயர்த்தியுள்ளது.
2019 மக்களவை தேர்தலின்போது பா.ஜனதா தனியாக 303 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது, கூட்டணி கட்சிகளுடன் சேர்த்த 353 இடங்களில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.