search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ரூ.4 ஆயிரம் கோடியில் கேதார்நாத்தில் ரோப்கார் திட்டம்- மத்திய மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல்
    X

    ரூ.4 ஆயிரம் கோடியில் கேதார்நாத்தில் ரோப்கார் திட்டம்- மத்திய மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல்

    • தற்போது சோன்மார்க்கில் இருந்து கேதார்நாத் வரை உள்ள தூரத்தை கடக்க 8 முதல் 9 மணி நேரம் ஆகிறது.
    • கேபிள் கார் அமைந்தால் பயண நேரம் 36 நிமிடங்களாக குறையும்.

    புதுடெல்லி:

    டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரி சபை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:-

    விவசாயிகளுக்கு உயர்தர மற்றும் மலிவு விலையில் பொதுவான கால்நடை மருந்துகளை வினியோகிக்கும் வகையில் ரூ.3,880 கோடி மதிப்புள்ள கால்நடை சுகாதாரம் மற்றும் நோய் கட்டுப்பாட்டு திட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள திருத்தத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. நல்ல தரமான மற்றும் மலிவு விலையில் பொது கால்நடை மருத்துவத்தை வழங்குவதற்கும், பசு ஆஷாதி திட்டத்தின் கீழ் மருந்துகளை விற்பனை செய்வதற்கான ஊக்கத்தொகையை வழங்குவதற்கும் ரூ.75 கோடி ஒதுக்க மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

    மேலும் பஞ்சாப், அரியானா, உத்தரகாண்ட், கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய 9 மாநிலங்கள் பொது நோய் தொற்று இல்லாத மண்டலங்களாக அறிவிக்கப்படும்.

    இதையடுத்து பிரதமர் மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிசபை கூட்டத்தில் உத்தரகாண்ட் மாநிலத்தில் கோவிந்த்காட்டில் இருந்து ஹேம்குண்ட் சாஹிப் வரை 12.4 கிலோமீட்டர் தொலைவு 'ரோப் கார்' அமைக்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு இருக்கிறது. இந்த திட்டம் ரூ.2,730.13 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.

    இதுபோல் உத்தரகாண்ட் மாநிலம் சோன்மார்க் முதல் கேதார்நாத் வரை 12.9 கி.மீட்டர் நீளத்துக்கு ரூ.4 ஆயிரத்து 81 கோடி செலவில் 'ரோப் கார்' திட்டத்தைச் செயல்படுத்தவும் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.

    தற்போது சோன்மார்க்கில் இருந்து கேதார்நாத் வரை உள்ள தூரத்தை கடக்க 8 முதல் 9 மணி நேரம் ஆகிறது. இந்த கேபிள் கார் அமைந்தால் பயண நேரம் 36 நிமிடங்களாக குறையும்.

    இவ்வாறு மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.

    Next Story
    ×