என் மலர்
இந்தியா

'அவுரங்கசீப்'பை புகழ்ந்த சமாஜ்வாதி எம்எல்ஏ.. மகாராஷ்டிர சட்டசபையில் இருந்து இடைநீக்கம்!

- இப்போதெல்லாம் திரைப்படங்கள் மூலம் அவுரங்கசீப் பிம்பம் சிதைக்கப்படுகிறது.
- அவுரங்கசீப் பல கோயில்களைக் கட்டினார் என்றும், அவரது படையில் பல இந்துக்கள் தளபதிகளாக இருந்தனர் என்றும் அபு ஆஸ்மி பேசியிருந்தார்.
மகாராஷ்டிரா மாநிலத்தின் சமாஜ்வாதி கட்சித் தலைவராக பொறுப்பு வகித்துவரும் எம்எல்ஏ அபு ஆஸ்மி. இவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், 17ஆம் நூற்றாண்டின் முகலாயப் பேரரசர் அவுரங்கசீப் ஒரு நல்ல நிர்வாகி என்று பேசியிருந்தார்.
ஔரங்கசீப்பை நான் ஒரு கொடூரமான, சகிப்புத்தன்மையற்ற ஆட்சியாளராகக் கருதவில்லை. இப்போதெல்லாம் திரைப்படங்கள் மூலம் அவுரங்கசீப் பிம்பம் சிதைக்கப்படுகிறது.
அவுரங்கசீப் பல கோயில்களைக் கட்டினார் என்றும், அவரது படையில் பல இந்துக்கள் தளபதிகளாக இருந்தனர் என்றும் அபு ஆஸ்மி பேசியிருந்தார்.
இது அம்மாநில அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவுரங்கசீப்பை புகழ்ந்து பேசிய அபு ஆஸ்மி மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கொந்தளித்தார்.
இதைத்தொடர்ந்து காவல்நிலையங்களில் அபு அஸ்மி மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்நிலையில் இன்று தொடங்கிய மகாராஷ்டிர சட்டமன்றக் கூட்டத்தொடரில் எம்எல்ஏக்கள் அபு அஸ்மி பிரச்சனையை எழுப்பினர்.
அவுரங்கசீப்பை புகழ்ந்து பேசியதற்காக அபு ஆஸ்மியை அவையில் இடைநீக்கம் செய்யும் தீர்மானத்தை பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் சந்திரகாந்த் பாட்டீல் கொண்டு வந்தார்.
இந்த தீர்மானம் அவையில் நிறைவேற்றப்பட்டு முழு கூட்டத்தொடர் முழுவதும் அபு ஆஸ்மி இடைநீக்கம் செய்யப்பட்டார். அபு அஸ்மி கருத்துக்கு இந்தியா கூட்டணியில் உள்ள உத்தவ் தாக்கரே பிரிவு சிவசேனா கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.