என் மலர்
இந்தியா

சீமான் வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை

- நடிகை புகாரின்பேரில், சீமான் மீது போலீசார் வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
- சீமான்- நடிகை தரப்பு பரஸ்பரம் பேசி முடிவெடுக்க வேண்டும்.
தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி சீமான் தன்னுடன் உறவு வைத்துக் கொண்டதாக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நடிகை ஒருவர் கடந்த 2011 ஆம் ஆண்டு புகார் அளித்தார். புகாரின்பேரில், சீமான் மீது போலீசார் வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மனு தாக்கல் செய்து இருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை கடந்த 17-ந்தேதி நடைபெற்றது. அப்போது, கற்பழிப்பு வழக்கை ரத்து செய்ய முடியாது என்றும், இந்த வழக்கை 12 வாரத்துக்குள் போலீசார் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.
இதனிடையே, உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக சீமான் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், இந்த விவகாரத்தில் முன்வைக்கப்பட்ட வாதங்களையும், அனைத்து அம்சங்களையும் உயர் நீதிமன்றம் முறையாக கருத்தில் கொள்ளவில்லை. தன் மீதான வழக்கை ரத்து செய்ய மறுத்த உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். மேல்முறையீட்டு மனுவை விசாரித்து தீர்ப்பு கூறும் வரை, 12 வாரங்களுக்குள் புலன் விசாரணை நடத்தி காவல் துறையினர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் இந்த மேல் முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள்,
* ஏற்கனவே இந்த வழக்கு திரும்ப பெறப்பட்ட நிலையில் 12 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
* சீமான்- நடிகை தரப்பு பரஸ்பரம் பேசி முடிவெடுக்க வேண்டும்.
* இடைப்பட்ட காலத்தில் settlement வழங்குவது குறித்து இருதரப்பும் பேசி முடிவெடுக்க வேண்டும்.
* மேலும், நடிகையின் பாலியல் புகார் தொடர்பாக உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.