என் மலர்
இந்தியா
செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு
- செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு (2023) ஜூன் மாதம் 14-ந்தேதி கைது செய்யப்பட்டார்.
- செந்தில் பாலாஜி வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
புதுடெல்லி:
தமிழக அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியை சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி அமலாக்கத் துறையினர் கைது செய்தனர்.
அ.தி.மு.க. ஆட்சியின்போது (2011-2016) போக்கு வரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி போக்குவரத்து கழகத்தில் டிரைவர் மற்றும் கண்டக்டர் பணிக்கு ஆட்களை சேர்ப்பதற்காக முறைகேடாக பண வசூலில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் தான் இந்த விவகாரத்தில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்தி ருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் அமலாக்கத் துறையினரும் நடவடிக்கை மேற்கொண்டு செந்தில் பாலாஜியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதைத் தொடர்ந்து கடந்த 15 மாதங்களுக்கும் மேலாக புழல் சிறையில் இருந்து வரும் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த ஜாமின் மனுக்கள் முதன்மை அமர்வு கோர்ட்டு மற்றும் சென்னை ஐகோர்ட்டில் தள்ளுபடியானது.
5 முறை ஜாமின் மறுக்கப்பட்டதை தொடர்ந்து செந்தில் பாலாஜி சுப்ரீம் கோர்ட்டை நாடினார். அவரது ஜாமின் மனு மீதான விசாரணை கடந்த சில மாதங்களுக்கு முன்பே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டி ருந்தது. அப்போது சுப்ரீம் கோர்ட்டிலும் ஜாமின் மறுக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து கடந்த மாதம் 20-ந்தேதி செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீதான விசாரணை மீண்டும் நடைபெற்றது. அப்போது அமலாக்கத்துறை மற்றும் செந்தில்பாலாஜி தரப்பு வக்கீல்கள் காரசாரமான விவாதத்தை முன் வைத்தனர்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அபஸ் எஸ்.ஓஹா, அகஸ்டின் ஜார்ஜ் மாயிஸ் ஆகியோர் செந்தில் பாலாஜி வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று கடந்த மாதம் 20-ந்தேதி தெரிவித்திருந்தனர்.
இதன்படி இன்று காலை செந்தில்பாலாஜி வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. பல மாதங்களாக சிறையில் இருப்பதை கருத்தில் கொண்டு செந்தில் பாலாஜியை நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்து நீதிபதிகள் பரபரப்பான உத்தரவை பிறப்பித்தனர்.
அமலாக்கத்துறை அலுவலகத்தில் வாரத்தில் 2 நாட்கள் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்கிற நிபந்தனையுடன் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. ரூ.25 லட்சம் பிணை தொகையுடன் இரு நபர் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக கடந்த மாதம் அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இந்த வழக்கில் செந்தில்பாலாஜி உள்பட 47 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் 100-க்கும் மேற்பட்டவர்கள் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதுபோன்ற சூழலில் செந்தில் பாலாஜியை ஜாமீனில் விடுவித்தால் அவர் சாட்சிகளை கலைக்கக் கூடும் என்பதால் ஜாமின் வழங்கக் கூடாது என்று வாதிட்டார்.
செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வக்கீல்கள் முகுல்ரோத்தகி, ராம்சங்கர் ஆகியோர் வாதிடும்போது, செந்தில் பாலாஜி வழக்கின் மீதான சாராம்சங்களை தனித்தனியாக பிரித்து விசாரணை நடத்தும் அமலாக்கத் துறை திட்டமிட்டு செயல்படுகிறது. கடந்த ஆண்டு சட்டத்துக்கு புறம்பாக கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியின் உடல்நிலை பாதிக்கப்பட்டு அவர் இருதய அறுவை சிகிச்சையும் செய்து கொண்டார். உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையிலும் தொடர்ந்து சிறையிலேயே இருந்து வரும் செந்தில் பாலாஜி மீதான விசாரணையை அமலாக்கத்துறையினர் எப்போதுதான் முடிப்பார்கள் என்பது கடவுளுக்குத் தான் தெரியும்.
எனவே செந்தில்பாலாஜியின் உடல் நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமின் வழங்க வேண் டும் என்று வாதிட்டிருந்தனர்.
இதுபோன்ற வாதங்களை ஏற்றே சுப்ரீம் கோர்ட்டு செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதைத் தொடர்ந்து புழல் சிறையில் இருந்து விடுதலையாகும் செந்தில் பாலாஜி நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்து போட உள்ளார். அதற்கான ஏற்பாடுகளை அவரது வக்கீல்கள் செய்து வருகிறார்கள்.
இதன் மூலம் 471 நாட்கள் சிறை வாசத்துக்கு பிறகு செந்தில்பாலாஜி விடுதலையாக உள்ளார்.