என் மலர்
இந்தியா

சட்டவிரோதமாக ஊடுருபவர்களுக்கு உதவும் நெட்வொர்க் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும்: டெல்லி போலீஸ்க்கு அமித் ஷா உத்தரவு

- சட்டவிரோத ஊடுருவல் தேசிய பாதுகாப்பு குறித்த விவகாரம்.
- இதை கடுமையான வகையில் அணுக வேண்டும்.
டெல்லி சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. அந்த கட்சியின் முதல் முறை பெண் எம்.எல்.ஏ.-வான ரேகா குப்தா முதல்வராக பதவி ஏற்றுள்ளார். தற்போது முதல் சட்டசபை கூட்டம் நடைபெற்று வருகிறது.
டெல்லியில சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. இதற்கு மத்திய அரசுதான் காரணம் என தேர்தல் பிரசாரத்தின்போது ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் கடுமையாக குற்றம்சாட்டினர்.
இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் டெல்லி மாநில சட்டம்-ஒழுங்கு தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் டெல்லி மாநில முதல்வர் ரேகா குப்தா, உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவிய வங்கதேசத்தினர், ரோஹிங்கியாவினருக்கு உதவும் நெட்வொர்க்கிற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெல்லி போலீஸ்க்கு அமித் ஷா உத்தரவிட்டுள்ளார்.
மேலும், டெல்லியில் மாநிலங்களுக்கிடையிலான சட்டவிரோத கும்பலை ஒழிப்பதற்கு முக்கியத்தும் கொடுக்க வேண்டும். மேலிருந்து கீழ், கீழிருந்து மேல் என போதைப்பொருள் வழக்கு, பொதைப்பொருள் நெட்வொர்க்கை முற்றிலும் ஒழிக்க வேண்டும்.
வங்கதேசத்தினர், ரோஹிங்கியாவினர் சட்டவிரோதமாக இந்தியாவில் வந்து தங்கவும், அவர்களுக்கு இங்கே வசதிகள் பெற்றுக்கொண்டு ஆவணங்கள் உருவாக்கும் கும்பலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சட்டவிரோத ஊடுருவல் தேசிய பாதுகாப்பு குறித்த விவகாரம் ஆகும். இதை கடுமையான வகையில் அணுக வேண்டும். அவர்களை கண்டுபிடித்து வெளியேற்ற வேண்டும்.
கட்டுமானம் தொடர்பான விசயங்கள், 2022 கலவர வழக்குகளை விரைவாக முடிவுக்கு கொண்டு வர டெல்லி போலீசார் அனுமதி தேவையில்லை. அரசு சிறப்பு வழக்கறிஞர்களை நியமித்து, வழக்குகளை விரைவில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.
கூடுதல் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு செயல்முறையை டெல்லி காவல்துறை விரைவில் தொடங்க வேண்டும். டிசிபி (DCP) அளவிலான அதிகாரிகள் காவல் நிலையங்களுக்குச் சென்று, பொது விசாரணை முகாம்களை நடத்தி, அவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக புதிய பாதுகாப்புக் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்த கூட்டத்தில் டெல்லி உள்துறை அமைச்சர் ஆஷிஷ் சூட், டெல்லி போலீஸ் கமிஷனர் சஞ்சய் அரோரா மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.