என் மலர்
இந்தியா
கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிரான வழக்குகளை சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு ஏற்றது
- இந்த வழக்கில் புதிய நோட்டீஸ் பிறப்பிக்க தேவையில்லை.
- அதே வேளையில் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமனம் தொடர்பான தமிழக அரசின் கூடுதல் மனுவை விசாரணைக்கு ஏற்பதாக தெரிவித்தனர்.
புதுடெல்லி:
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சட்டமன்றம் இயற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காததையும், அரசின் பல்வேறு திட்டம் தொடர்பான ஆணைகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பதையும் எதிர்த்தும் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஜெ.பி.பர்திவாலா மற்றும் ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வெங்கடரமணி ஆஜராகி, தமிழ்நாடு கவர்னர் தொடர்பான வழக்குகளை ஒரு வாரத்துக்கு பின்னர் விசாரணைக்கு எடுக்க வேண்டும் எனவும், இந்த விவகாரத்தில் கூடுதல் முன்னேற்றங்கள் உள்ளன என்றும் நீதிபதி ஜெ.பி.பர்திவாலா மற்றும் நீதிபதி மகாதேவன் அமர்வில் தெரிவித்தார்.
அப்போது நீதிபதிகள், தமிழ்நாடு கவர்னர் மற்றும் அரசுக்கு இடையேயான விவகாரத்தில் முடிவு எட்டப்பட்டுள்ளதா? அல்லது பழைய நிலையே தொடருகிறதா? என கேள்வி எழுப்பினர்.
இதற்கு தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் வில்சன் மற்றும் அபிஷேக் சிங்வி ஆகியோர் கவர்னர்-அரசு இடையேயான மோதல் போக்கு என்பது பல்வேறு விவகாரங்களில் தொடர்ந்து கொண்டு வருகின்றன. இதுவரை முடிவுக்கு வரவில்லை. இந்த விவகாரத்தில் தற்போது துணை வேந்தர்கள் நியமன பிரச்சனையும் வந்துள்ளது.
மேலும் துணை வேந்தர் நியமனம் தொடர்பான கூடுதல் மனுவையும் முந்தைய வழக்குகளோடு இணைத்து விசாரணைக்கு ஏற்க வேண்டும், பல்கலைக் கழக துணைவேந்தர் நியமனம் தொடர்பான கூடுதல் மனு மீது புதிய நோட்டீஸ் பிறப்பிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
இதற்கு பதிலளித்த நீதிபதிகள், இந்த வழக்கில் புதிய நோட்டீஸ் பிறப்பிக்க தேவையில்லை. அதே வேளையில் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமனம் தொடர்பான தமிழக அரசின் கூடுதல் மனுவை விசாரணைக்கு ஏற்பதாக தெரிவித்தனர். மேலும் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு அரசு, கவர்னர் அதிகாரம் தொடர்பான வழக்கு விசாரணையை ஒரு வாரத்துக்கு ஒத்தி வைப்பதாகவும், அன்றைய தினம் இறுதி விசாரணை நடைபெறும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தனர்.