என் மலர்
இந்தியா

அதானி குழுமத்தின் 'தாராவி' மறுசீரமைப்பு திட்டத்தை நிறுத்த உச்சநீதிமன்றம் மறுப்பு.. பின்னணி என்ன?

- இது நீதிமன்றத்தின் மனசாட்சியை அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஒரு மோசடி.
- உச்ச நீதிமன்றத்தின் முன், நாங்கள் இப்போது எங்கள் ஏலத்தை ரூ.8,640 கோடியாக உயர்த்துகிறோம்.
ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியாக மும்பை தாராவி விளங்குகிறது. தமிழர்கள், முஸ்லிம்கள் அதிகளவில் வசிக்கும் இந்த குடிசைப்பகுதியில் உள்ள வீடுகள் புறாக்கூண்டுகளை போல சிறிது சிறிதாக இருக்கும். குடிசை வீடுகள் என்றாலும் மாடிகள் இருக்கும்.
ஒரு வீட்டில் பல அறைகளை உருவாக்கி மக்கள் வசித்து வருகின்றனர். மும்பைக்கு பிழைப்பு தேடி வருபவர்களுக்கு தாராவி தான் சொர்க்கப்பூமி என்று சொல்லலாம்.
அடுக்குமாடிகளை உருவாக்கும் தாராவி சீரமைப்பு திட்டம் கடந்த 30 ஆண்டுகளாக கிடப்பில் இருந்த நிலையில் துபாய் நிறுவனமான செக்லிங்க் டெக்னாலஜிஸ் நிறுவனத்துக்கு டெண்டர் வழங்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் இந்த டெண்டரை ரத்து செய்த மகாராஷ்டிராவின் ஆளும் பாஜக கூட்டணி, தாராவி மறுசீரமைப்பு திட்ட டெண்டரை அதானி குழுமத்துக்கு கொடுத்தது.
இதை எதிர்த்து துபாய் நிறுவனமான செக்லிங்க் டெக்னாலஜிஸ் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. தாராவி மறுசீரமைப்பு திட்டத்தின் ஒப்பந்தத்தை அதானி குழுமத்திற்கு வழங்குவதில் "மோசடி" நடந்ததாக செக்லிங்க் குழுமம் குற்றம் சாட்டியது. இந்த ஒப்பந்தத்தை அதானி குழுமத்திற்கு வழங்குவதற்காக நிபந்தனைகள் மாற்றப்பட்டதாக அந்நிறுவனம் குற்றம்சாட்டியது.
ஆனால் செக்லிங் நிறுவன மனுவை நிராகரித்த மும்பை உயர்நீதிமன்றம், அதானி குழுமத்துக்கு திட்டத்தை வழங்கும் மாநில அரசின் முடிவை கடந்த டிசம்பர் 2024 இல் உறுதி செய்தது. இதை எதிர்த்து செக்லிங் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதானி குழுமத்தின் தாராவி மறுசீரமைப்பு கட்டுமானப் பணிகளை நிறுத்தவும் அந்நிறுவனம் கோரியிருந்தது.
இந்த மேல்முறையீடு மனு இன்று (மார்ச் 07) தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதி பி.வி. சஞ்சய் குமார் அடங்கிய அமர்வில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வாதிட்ட செக்லிங்க் தரப்பு வழக்கறிஞர், "மறுசீரமைப்புக்கு குறைவான பணத்தை எந்த அரசாங்கமும் கேட்பதை நான் பார்த்ததில்லை. அதானிக்கு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
இது நீதிமன்றத்தின் மனசாட்சியை அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஒரு மோசடி. 2018 ஆம் ஆண்டில், அதானியின் ரூ.5,069 கோடி ஏலம் ஏற்கப்பட்டு, நாங்கள் (செக்லிங்க்) முன்மொழிந்த ரூ.7,200 கோடி ஏலம் நிராகரிக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் முன், நாங்கள் இப்போது எங்கள் ஏலத்தை ரூ.8,640 கோடியாக உயர்த்த தயாராக இருக்கிறோம்" என்று தெரிவித்தார்.
அதானி குழுமத்தின் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, மறு கட்டுமான பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும், சில ரயில்வே குடியிருப்புகள் ஏற்கனவே இடிக்கப்பட்டுவிட்டதாகவும், கோடிக்கணக்கான மதிப்புள்ள இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளதாகவும் கூறினார். சுமார் 2000 பேர் கட்டுப்பாணிகளில் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து பேசிய நீதிபதிகள், இந்த திட்டத்தின் பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதால் கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்க முடியாது என்று தெரிவித்தனர். மேலும் மும்பை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு சரி என்று வாய்மொழியாக தெரிவித்தனர்.
ஆனாலும் இந்தத் திட்டம் தொடர்பான அனைத்துப் பணப் பரிமாற்றங்களும் ஒரே ஒரு எஸ்க்ரோ கணக்கிலிருந்து செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், மகாராஷ்டிரா அரசுக்கும் அதானி குழுமத்துக்கும் நோட்டீஸ் அனுப்பி, அடுத்த விசாரணையை மே 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.