search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஒரு கிலோ வெங்காயத்தை 1 ரூபாய்க்கு விற்ற விவசாயி
    X

    ஒரு கிலோ வெங்காயத்தை 1 ரூபாய்க்கு விற்ற விவசாயி

    • வெங்காயம் விளைச்சல் கணிசமாக அதிகரித்துள்ளதால் அதன் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.
    • 512 கிலோ வெங்காயத்தை விற்பனை செய்ததில் ரூ.2 மட்டுமே கிடைத்த வேதனையை துக்காராம் பகிர்ந்து கொண்டார்.

    ஜோலாப்பூர்:

    மராட்டிய மாநிலத்தில் வெங்காயம் விளைச்சல் கணிசமாக அதிகரித்துள்ளதால் அதன் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.

    பார்ஷி பகுதியைச் சேர்ந்தவர்ராஜேந்திர துக்காராம் சவான் (வயது 58). விவசாயி. இவர் தனது நிலத்தில் விளைந்த 512 கிலோ வெங்காயத்தை விற்பனை செய்ய வேளாண் விளை பொருள் விற்பனை கூடத்துக்கு கொண்டு சென்றார். ஆனால் கடுமையான விலை வீழ்ச்சியால் 1 கிலோ வெங்காயம் 1 ரூபாய்க்கே கொள்முதல் செய்யப்பட்டது.

    மொத்தத்தில் 512 கிலோ வெங்காயத்தை விற்றதில் விவசாயி துக்காராமுக்கு ரூ.512 மட்டுமே கிடைத்தது. வெங்காயத்தை 70 கிலோ மீட்டர் தூரம் கொண்டு சென்றதற்கான லாரி வாடகை, சுமை கூலி ஆகியவற்றுக்கு ரூ.510 செலவானது. அந்த வகையில் 512 கிலோ வெங்காயத்தை விற்ற விவசாயி துக்காராமுக்கு எல்லா செலவும் போக மிஞ்சியது வெறும் 2 ரூபாய்தான்.

    வெங்காயத்தை வாங்கிய கடைக்காரர், விவசாயி துக்காராமிடம் 2 ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். அந்த காசோலையையும் 15 நாட்களுக்கு பிறகே பணமாக்க முடியும். இந்த காசோலை சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. 512 கிலோ வெங்காயத்தை விற்பனை செய்ததில் ரூ.2 மட்டுமே கிடைத்த வேதனையை துக்காராம் பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது:-

    512 கிலோ வெங்காயத்தை விற்பனை செய்ததன் மூலம் எனக்கு வெறும் 2 ரூபாயே கிடைத்தது. இந்த விளைவிக்க கிட்டத்தட்ட ரூ.40 ஆயிரம் செலவழித்துள்ளேன். கடந்த 4 ஆண்டுகளில் விதைகள், உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் விலை 2 மடங்காக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு 1 கிலோ வெங்காயத்துக்கு 20 ரூபாய் சம்பாதித்தேன். இந்த ஆண்டு மொத்தமே 2 ரூபாய்தான் கிடைத்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விவசாயி துக்கராமிடம் வெங்காயத்தை வாங்கிய வியாபாரி கலீபா கூறுகையில், "ரசீதுகள் மற்றும் காசோலைகள் வழங்கும் செயல்முறையை நாங்கள் கணினி மயமாக்கியுள்ளோம். இதன் காரணமாக துக்காராமுக்கு பிந்தைய தேதியிட்ட காசோலை கொடுக்கப்பட்டது. இது ஒரு பொதுவான நடைமுறையாகும்.

    விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட வெங்காயம் தரம் குறைந்ததாக இருந்தது. இதற்கு முன்பு அவர் 18 ரூபாய்க்கு விற்கப்பட்ட உயர்ரக வெங்காயத்தை கொண்டு வந்துள்ளார். அதன் பிறகு மற்றொரு முறை அவரது வெங்காயத்துக்கு கிலோவுக்கு 14 ரூபாய் வழங்கப்பட்டது. இப்போது தரம் குறைந்த வெங்காயத்தை கொண்டு வந்ததால் கிலோ 1 ரூபாய்க்கே எடுக்க முடிந்தது" என்றார்.

    Next Story
    ×