என் மலர்
இந்தியா
தெலுங்கு தேசம் கட்சியில் வாரிசு உரிமை இல்லை- சந்திரபாபு நாயுடு
- எந்தத் துறையாக இருந்தாலும் பரம்பரை என்பது கட்டுக்கதை.
- பாரம்பரியம் மட்டுமே அனைத்தையும் நிலைநிறுத்துவதில்லை.
திருப்பதி:
ஆந்திர மாநிலத்தில் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷுக்கு துணை முதல் மந்திரி பதவி வழங்க வேண்டும் என தெலுங்கு தேசம் கட்சி முக்கிய நிர்வாகிகள் வலியுறுத்தி உள்ளனர்.
ஏற்கனவே நடிகர் பவன் கல்யாண் துணை முதல் மந்திரியாக இருக்கும் நிலையில் சந்திரபாபு நாயுடுவின் மகனுக்கு துணை முதல் - மந்திரி பதவி கோரிக்கை எழுந்துள்ளது ஆந்திர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்த கேள்விக்கு சந்திரபாபு நாயுடு கூறியதாவது 'தொழில், திரைப்படம், அரசியல், குடும்பம் என எந்தத் துறையாக இருந்தாலும் பரம்பரை என்பது கட்டுக்கதை.
ஒரு தலைமுறை தொழிலில் சிறந்து விளங்கி நன்றாக சம்பாதித்தால் அடுத்த தலைமுறை அதை இழக்க நேரிடும்.
நம் நாட்டில் ஒரு காலத்தில் பலம் வாய்ந்த கட்சிகள் பின்னர் காணாமல் போய்விட்டன. பாரம்பரியம் மட்டுமே அனைத்தையும் நிலைநிறுத்துவதில்லை. இது சில சிறந்த வாய்ப்புகளுக்கு வழிவகுக்கும்.
எவ்வாறு வழங்கப்படுகின்றன என்பது முக்கியம். அதை சரியான முறையில் பெற்றால் மட்டுமே மேன்மை அடைய முடியும். நான் வாழ்வாதாரத்திற்காக அரசியலைச் சார்ந்து இருந்ததில்லை.
நான் 33 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத் தொழிலைத் தொடங்கினேன். எனது குடும்ப உறுப்பினர்கள் அதை நிர்வகித்து வருகின்றனர். இதே தொழிலை தொடர்ந்திருந்தால் லோகேஷ்க்கு மிகவும் எளிதாக இருந்திருக்கும்.
ஆனால் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அரசியலுக்கு வந்தார். அதில் அவர் திருப்தி அடைந்துள்ளார். இதில் வாரிசு உரிமை இல்லை'
மத்திய அரசில் சேரும் எண்ணம் இல்லை. மாநிலத்திலேயே இருப்பேன் திறமை மற்றும் செயல்திறனால் மட்டுமே லோகேஷ் வாரிசாக வளர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தெலுங்கு தேசம் கட்சியின் வாரிசு குறித்து கடந்த காலங்களிலும் விவாதிக்கப்பட்டது. என்.டி. ராமாராவ் முதல் மந்திரியாக இருந்தபோது, அவரது மகன் பாலகிருஷ்ணாவை அரசியல் வாரிசாக அறிவித்தார்.
ஆனால் ஐதராபாத் திரும்பிய அவர் கட்சித் தலைவர்களின் ஆலோசனையின் பேரில் தனது கருத்தை மாற்றிக்கொண்டார்.
மேலும், 2014 தேர்தலுக்கு முன், நந்தமுரி ஹரிகிருஷ்ணா தனது குடும்பத்தில் வாரிசு பிரச்சினையை எழுப்பினார். அவரது மகன் ஜூனியர் என்.டி.ஆரை தனது அரசியல் வாரிசாக அறிவிக்க சந்திரபாபுவுக்கு கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. ஆனால் அவர் அப்படி ஒரு கருத்தை வெளியிட மறுத்துவிட்டார்.
இப்போது எதிர்பாராத விதமாக தெலுங்கு தேசம் கட்சியில் மீண்டும் அதே விவாதம் தொடங்கியுள்ளது. ஆனால் சந்திரபாபு தொடக்கத்திலேயே அதைத் தடுத்து நிறுத்தி உள்ளார்.