என் மலர்
இந்தியா
15 நிமிடம் பிரார்த்தனை... பின்னர் கைவரிசை- அனுமன் கோவிலில் வெள்ளி கிரீடத்தை திருடிச்சென்ற திருடன்: வீடியோ
- கோவிலுக்குள் வந்த ஒரு நபர், சாமி சன்னதி முன்பு அமர்ந்து கண்களை மூடி பிரார்த்தனை செய்தார்.
- வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
பறவைகள் பல விதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் என்று கவிஞர் பாடல் எழுதினார். அதுபோல் திருடர்களும் பல விதமாக உள்ளனர். திருட வந்த வீட்டில் சமையல் செய்து சாப்பிட்டவர்கள், தூங்கியவர்கள், மது வகைகளை குடித்து விட்டு குத்தாட்டம் போட்டவர்கள் என்று பல வினோத செயல்களில் ஈடுபட்டவர்கள் உள்ளனர்.
அதுபோல் இங்கு ஒரு திருடன், கோவிலில் பிரார்த்தனை செய்து விட்டு சாமியிடம் வரம் பெற்று செல்வதுபோல், சாமி சிலையில் இருந்த வெள்ளி கிரீடத்தை திருடிச் சென்றுள்ளான்.
உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்த இந்த வினோத சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள அனுமன் கோவில் ஒன்றில் வழக்கமான பூஜைகளுக்கு பின்னர் பக்தர்கள் நடமாட்டம் குறைந்த நேரத்தில் கோவிலுக்குள் வந்த ஒரு நபர், சாமி சன்னதி முன்பு அமர்ந்து கண்களை மூடி பிரார்த்தனை செய்தார்.
அதை பார்க்கும் மற்றவர்களுக்கு எப்படிப்பட்ட பக்திமான் இவர் என்றே நினைக்கத்தோன்றும். ஆனால் அதன் பின்னர் அவர் செய்த சம்பவம்தான், அட! இதுக்குத்தானா இந்த 'பில்டப்' என்று கேட்கும் வகையில் இருந்தது.
சுமார் 15 நிமிடம் பிரார்த்தனை செய்து கொண்டு இருந்த அந்த நபர், கண்களை மெல்ல திறந்து பார்த்தார். பின்னர் மெல்ல எழுந்து கருவறைக்குள் சென்ற அந்த நபர், அனுமன் சிலையில் இருந்த வெள்ளி கிரீடத்தை நைசாக எடுத்து தன்னிடம் இருந்த துணிப்பைக்குள் வைத்தார்.
அக்கம்பக்கத்தில் யாரும் இருக்கிறார்களா என்பதை பார்த்த அந்த நபர் மெதுவாக கோவிலில் இருந்து வெளியே சென்றார். இந்த சம்பவங்கள் அனைத்தும் கோவிலில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது.
சற்று நேரத்தில் சன்னதிக்கு வந்த பூசாரி, சாமி சிலையில் இருந்த கிரீடம் மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி போலீசிலும் புகார் செய்தார். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த நபரை தேடிவருகிறார்கள்.
கோவிலில் சாமியிடம் வேண்டிக்கொண்டு, சாமி சிலையில் இருந்த கிரீடத்தையே திருடிச்சென்ற அந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
Religious thief (first this guy performed the puja rituals properly, Then he stole the silver crown of Hanuman ji, Mirzapur UP)
— Ghar Ke Kalesh (@gharkekalesh) December 30, 2024
pic.twitter.com/imvpdDcdrM