search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அவுரங்கசீப்பை புகழ்பவர்கள் துரோகிகள்.. எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றிய ஏக்நாத் ஷிண்டே
    X

    அவுரங்கசீப்பை புகழ்பவர்கள் துரோகிகள்.. எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றிய ஏக்நாத் ஷிண்டே

    • அவுரங்கசீப் மகாராஷ்டிராவைக் கைப்பற்ற வந்தார், ஆனால் அவர் சிவாஜி மகாராஜின் தெய்வீக சக்தியை எதிர்கொண்டார்.
    • நாக்பூரில் நேற்று கலவரம் வெடித்தது. கடைகள் தீவைத்து எரிக்கப்பட்டு மக்கள் தாக்கப்பட்டனர்.

    முகலாய மன்னர் அவுரங்கசீப்பை புகழ்ந்து பேசுபவர்கள் "துரோகிகள்" என்று மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் அவுரங்கசீப் கல்லறையை இடிக்க வேண்டும் என்று இந்து அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.

    எல்லோரும் அதையே விரும்புவதாகவும் அதை சட்டப்படி செய்வோம் என்றும் மகாரஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் தெரிவித்தார். இதற்கிடையே இந்த பிரச்சனை பூதாகாரம் ஆகியுள்ள நிலையில் நாக்பூரில் நேற்று கலவரம் வெடித்தது. கடைகள், வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டு மக்கள் தாக்கப்பட்டனர்.

    இந்நிலையில் எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போல் ஏக்நாத் ஷிண்டே பேசியுள்ளார். தானே மாவட்டத்தின் டோம்பிவ்லி பகுதியில் உள்ள கர்தா சௌக்கில் நிறுவப்பட்ட சிவாஜி மகாராஜின் சிலையை திறந்து வைக்கும் விழாவில் நேற்று கலந்துகொண்டு பேசிய ஏக்நாத் ஷிண்டே, அவுரங்கசீப் மகாராஷ்டிராவைக் கைப்பற்ற வந்தார், ஆனால் அவர் சிவாஜி மகாராஜின் தெய்வீக சக்தியை எதிர்கொண்டார். இன்னும் அவரை (அவுரங்கசீப்பை) புகழ்ந்து பாடுபவர்கள் துரோகிகளைத் தவிர வேறில்லை என்று ஷிண்டே கூறினார்.

    சத்ரபதி சிவாஜி, ஒன்றுபட்ட இந்தியாவின் பெருமையும், இந்துத்துவத்தின் கர்ஜனையுமாகும். சிவாஜி மகாராஜ் ஒரு தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர், சகாப்தத்தின் மனிதர், நீதியை ஊக்குவிப்பவர் மற்றும் சாமானிய மக்களின் மன்னர்.

    மகாராஷ்டிராவின் புகழ்பெற்ற வரலாற்றை தொடர்ந்து நினைவூட்டும் விதமாக இந்த சிலை செயல்படும். இளைஞர்கள் மற்றும் வருங்கால சந்ததியினர் சிவாஜி மகாராஜின் துணிச்சல் மற்றும் நிர்வாகத்தின் மதிப்புகளை அறிந்துகொள்ள ஊக்கமளிக்கும். இந்த கர்தா சௌக் இனி சத்ரபதி சிவாஜி மகாராஜ் சௌக் என்று அழைக்கப்படும் என்று ஷிண்டே கூறினார்.

    இதை கேட்டு பரவசம் அடைந்த கூட்டத்தினர் "ஜெய் பவானி, ஜெய் சிவாஜி" என்ற கோஷங்களை எழுப்பினர். இதற்கிடையே அவுரங்கசீப் கல்லறை பாபர் மசூதியை போல வேரோடு பிடுங்கி எறியப்படும் என இந்து அமைப்புகள் சூளுரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×