என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
இந்தியா
![மகா கும்பமேளா கூட்ட நெரிசல் குறித்து விசாரணை நடத்த ஜே.பி.சி. அமைக்க வேண்டும்: திரிணாமுல் காங்கிரஸ் மகா கும்பமேளா கூட்ட நெரிசல் குறித்து விசாரணை நடத்த ஜே.பி.சி. அமைக்க வேண்டும்: திரிணாமுல் காங்கிரஸ்](https://media.maalaimalar.com/h-upload/2025/02/10/9161178-kalyanbaneerjee.webp)
மகா கும்பமேளா கூட்ட நெரிசல் குறித்து விசாரணை நடத்த ஜே.பி.சி. அமைக்க வேண்டும்: திரிணாமுல் காங்கிரஸ்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 30 பேர் உயிரிழப்பு.
- உயிரிழப்பு எண்ணிக்கையை மாநில அரசு மறைப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம்.
மகா கும்பமேளா திருவிழாவையொட்டி உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் கோடிக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன், அதாவது ஜனவரி 29-ந்தேதி மவுனி அமாவாசையை முன்னிட்டு அதிகாலை ஒரே நேரத்தில் லட்சக்கணக்காக பக்தர்கள் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த விபத்தில் 30 பேர் உயிரிழந்தாகவும், 60 பேர் காயம் அடைந்ததாகவும் உத்தர பிரதேச அரசு தெரிவித்தது.
ஆனால் உயிரிழந்தவர்களின் உண்மையான எண்ணிக்கையை மறைப்பதாக மாநில அரசு மீது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்த நிலையில் பிரயாக்ராஜ் கும்பமேளா கூட்ட நெரிசல் குறித்து விசாரணை நடத்த பாராளுமன்ற கூட்டுக்குழு அமைக்க வேண்டும் என பட்ஜெட் கூட்ட விவாதத்தின்போது திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக கல்யாண் பானர்ஜி பேசுகையில் "45 நாட்கள் கும்பமேளா திருவிழாவிற்கான 2500 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ள நிலையில், மிகப்பெரிய மற்றும் துரதிருஷ்டவசமான கூட்ட நெரிசல் குறித்து அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பிரேத பரிசோதனை அறிக்கை, உயிரிழந்தவர்களின் எணணிக்கை, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கான நிவாரணம் அல்லது இறப்பு சான்றிதழ் வழங்குதல் குறித்து எந்த தெளிவும் இல்லை.
மாநில அரசின் குறைபாடு தொடர்பாக எந்தவொரு நடவடிக்கை அல்லது விசாரணை மத்திய அரசால் ஏன் எடுக்கப்படவில்லை?, நீங்கள் அதை ஒரு உள்நாட்டு பிரச்சனையாக ஆக்கிவிட்டீர்கள். அது இனி ஒரு மாநில பிரச்சினை அல்ல. மகா கும்பமேளா தொடர்பான புகார்களை விசாரிக்க நாடாளுமன்றத்தால் ஒரு கூட்டுக்குழு அமைக்கப்பட வேண்டும்" என வலியுறுத்தினார்.